பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு நாளும் பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லிய அநுரகுமார திஸாநாயக்க முதன்முதலில் எங்களுக்கு எதிராகவே பயன்படுத்தினார். ஆதலால் அவர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனையில் செவ்வாய்க்கிழமை (22) பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் கலந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இங்கு உரையாற்றுகையில்,
உள்ளூராட்சி தேர்தல் பாராளுமன்றத் தேர்தலை விடவும் அப்பாற்பட்டது. என்பதை மறந்து விடக் கூடாது. நாட்டின் ஜனாதிபதி முக்கியமாக தமிழ் பேசும் மக்கள் உள்ள உள்ளுராட்சி சபைகளின் குறிப்பாக அக்கரைப்பற்று, சம்மாந்துறை பிரதேசங்களுக்கு வருகை தந்து பிரதேச சபைகளின் அதிகாரிகளை என்னிடம் தாருங்கள் என்று தவித்துக் கொண்டு கேட்கின்றார். அது முக்கியமான விடமாகும்.
இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்ற அதிகாரத்தை விடவும், ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்தை விடவும் உள்ளுராட்சி சபைகளுக்கு அதிகாரங்கள் இருக்கின்றதென்று கூறினால், என்ன நிஸாம் காரியப்பர் கதைப்பதென்று நினைப்பீர்கள். அதுதான் உண்மையாகும்.
பாராளுமன்றத்தில் பிரதேச அபிவிருத்தி நிதி இருக்கின்றதா என்றால் கிடையாது. எங்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் கிடையாது. அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தங்களின் ஊர்களில் உள்ள வீதிகளை திருத்துவதற்கு ஐந்து சதமும் கிடையாது. அது அவர்களின் கொள்கையாகும்.
ஜனாதிபதி அவருடைய நிதியை மகிந்தராஜபக்ஷ செய்த மாதிரி நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் முடியாது. அது அவர்களின் கொள்கை. அந்த கொள்கைக்கு அவர்கள் சிறைக் கைதிகள் போலாகிவிட்டார்கள். அதைவிட்டு அவர்கள் வெளிவர முடியாது. இதை இந்த ஐந்து வருடமும் செய்ய முடியாது.
ஆதலால், இருக்கின்ற ஒரே இடம் உள்ளுராட்சி சபைகள்தான். உள்ளுராட்சி சபைகளுக்குத்தான் தங்கள் மக்களின் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய அதிகாரம் இருக்கின்றது.
இன்று இலங்கையில் மூன்று உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்களைப் பற்றி பேசிக்காத்தகொண்டிருக்கின்றார்கள். கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ளுமா அல்லது ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ளுமா என்பதாகும்.
இரண்டாவது யாழ்ப்பாண மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக் கொள்வது. மூன்றாவது அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்தை அமோக வெற்றியுடன் தக்க வைத்துக் கொள்வீர்களா என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
வெற்றி கொள்ளாவிட்டால் 40 வருடங்களின் பின்னர் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினரை இனிமேல் பெற்றுக் கொள்ள முடியாதென்று சொல்லத் தொடங்குவார்கள்.
இப்போது நாட்டில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. ஸ்டிக்கர் ஒட்டிய ருஸ்தியை பய்ஙகரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு அவரின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்ததாகச் சொன்னார்கள்.
இப்படி பொய்யான வாதங்களை முன் வைக்கின்ற அரசாங்கமாக மாறியிருப்பது எனக்கே புதினமாக இருக்கின்றது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் பலஸ்தீனை தாக்கியது. ஒரு நாள் மாத்திரம் 400 பெண்கள் உயர் இழந்தார்கள்.
இதையிட்டு இந்த அரசாங்கம் ஒரு அனுதாப பிரேரணையாவது கொண்டு வந்தார்களா? நாங்கள் பாராளுமன்றத்தில் அனுதாப பிரேரணை கொண்டு போக இருக்கின்றோம்.
இதற்கு ஆட்சியாளர்களின் ஆதரவையும் கோருவோம். பலஸ்தீன் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் இதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆர்ப்பாட்டம் செய்ததா என்று கேட்கின்றேன்.
இவர்களினால் இதைச் செய்ய முடியாது. இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தீர்களே உங்களுக்கு வெட்கமில்லையா.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு நாளும் பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லிய அநுரகுமார திஸாநாயக்க முதன்முதலில் எங்களுக்கு எதிராகவே பயன்படுத்தினார். ஆதலால் அவர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
இதன் பின்னர் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்களை பிடிக்கப் போகின்றேன் என்று சொல்லிவிட்டு, பயங்கரவாத தடைச் சட்டம் இன்னும் இதற்காக பாவிக்கப்படவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையை இப்போது சிஐடியிடம் கொடுத்துள்ளார்.
ஜனாதிபதியாகி ஏழு மாதங்களகியுள்ள நிலையில் இந்த அறிக்கையை அப்போதே கொடுத்து இருந்தால், இப்போது நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா.
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளை கைது செய்வேன் என்று பெரிதாகப் பேசியவர், ஒன்றும் செய்ய முடியாமல் சிஐடியிடம் கொடுத்துள்ளார். இதை அவர் தெரியாமல் செய்யவில்லை. தெரிந்து கொண்டுதான் செய்கின்றார்.
அவர் கொடுக்கமாட்டார். இன்றைய அரசாங்கம் அமெரிக்காவின் கைப்பிள்ளை. ஐ.எம்.எப் சலுகை அமெரிக்காவின் கைகளில் இருக்கின்றது.
அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தங்களுக்கு எதுவும் நடக்கலாமென்ற பயத்தில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளார்.
இதனால்தான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் இளைஞனை கைது செய்வதற்கு ஜனாதிபதி கையொப்பம் வைக்கின்றார். நாளை மறுதினம் ஐரோப்பிய பிரதிநிதிகள் ஜீஎஸ்பி கொடுப்பது பற்றி ஆராய்வதற்கு ஒரு குழு இலங்கை வரவுள்ளது.
அமெரிக்காவுக்கு கூஜா பிடித்தால் அமெரிக்கா புதிதாக விதித்துள்ள வரியை விதிக்க மாட்டாதென்று நினைக்கின்றார். இவரை கணக்கெடுக்கவில்லை. 83 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அது 90 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே அட்டாளைச்சேனை மக்கள் எங்கள் கைகளை பல்படுத்த வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கும் பயந்து அடங்கிப் போவதில்லை என்றார்.