புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தொடரும் கொலைகளுக்கு அநுர அரசே பொறுப்பு! – சஜித் குற்றச்சாட்டு  

தொடரும் கொலைகளுக்கு அநுர அரசே பொறுப்பு! – சஜித் குற்றச்சாட்டு  

2 minutes read

“இலங்கையில் கொலைக் கலாசாரம் தலைதூக்கி வருகின்ற நிலையில், அதனைத் தடுக்க முடியாமல் அநுர அரசாங்கம் மௌனம் காக்கும்போது, தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பில்லை என எவ்வாறு கூறுவது என்பதில் பிரச்சினை காணப்படுகின்றது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

புலத்சிங்கள பிரதேசத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாட்டு மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கும், தமது அன்றாட வாழ்க்கையைப் பாதுகாப்பான முறையில் கழிக்கவும் ஏற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டியது நாட்டை ஆளும் அரசாங்கத்தினது கடமையாகும்.  தற்போதைய அரசாங்கத்துக்கு இரு தேர்தல்களிலும் பெரும் மக்கள் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முறைமையில் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்தனர்.

இன்று நாட்டில் பயங்கரமான சூழ்நிலை உருவாகி, கொலைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இந்த வருடம் ஆரம்ப காலப்பகுதிக்குள்  மட்டும் அதிக அளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அச்சமின்றி வீடுகளுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலை இன்று காணப்படுகின்றன. வீதிகளில் சுதந்திரமாக நடமாடக்கூட முடியாத நிலையை நாடு எட்டியுள்ளது.

வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என சகலருக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைக்கு நாடு தற்போது வந்துள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற சபை அமர்வுகளிலும் வெளியிலும் கேள்வியெழுப்பினால், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

நாட்டில் கொலைக் கலாசாரம் தலைதூக்கி வருகின்ற நிலையில், அதனைத் தடுக்க முடியாமல் அரசாங்கம் மௌனம் காத்து இருக்கும் போது, தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லை என எவ்வாறு கூறுவது என்பதில் பிரச்சினை காணப்படுகின்றது. இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அங்கத்தவர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வகுப்புகளை நடத்துவதற்குக் கூட முயற்சித்தனர். ஆன போதிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் டியுஷன் போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சட்டத்தை விட தற்போது தோட்டா, வாள், கத்தி, வெடிகுண்டு என்பன வென்றுள்ளன. இவ்வாறு ஒரு நாட்டை நடத்த முடியாது. சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினையை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

சட்டம், ஒழுங்குப் பிரச்சினைக்கு அரசாங்கமே  பொறுப்புக் கூறவும் வேண்டும். குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள் என குடிமக்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை.

அச்சத்தோடு தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு இன்று குடிமக்கள் தள்ளப்பட்டுள்எனர். தினந்தோறும் அச்சத்தோடு பொழுதை கழித்து விட முடியாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்களுக்குள்ளும் கொலைகள் இடம்பெற்று வரும் நாட்டில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

நாடு எங்கே சென்று கொண்டிருக்கின்றது? சட்டம், ஒழுங்கை சரியான முறையில் பேண வேண்டும். அரசாங்கம் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இதனைச் சாதாரணமாக கடந்து விட முடியாது. இந்தப்  போக்கு சரியான போக்கல்ல. மறுபுறம் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையில் இருந்து இப்போது விலகிச் செல்கின்றனர்.

விகாரைகள், வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், பொலிஸ் நிலையங்கள்  ஊடாக சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைந்து காணப்பட்டன. இன்று இவை இல்லை. இன்று இந்த ஆளுந்தரப்பினரிடம் வெறும் வாய்ப்பேச்சும், ஆணவப் பெருமிதமுமே காணப்படுகின்றன.

மக்களிடம் பொய் சொல்லி, 24 மணி நேரமும் மக்களை ஏமாற்றி பொய்யான அரசியலைச் செய்யும் நிலையே காணப்படுகின்றது. இந்தப் பொய், ஏமாற்று, மற்றும் செயல் இல்லாத வெறும் வாய்ப்பேச்சுக்களை வைத்து முன்னெடுத்து வரும் அரசியல் கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும். இந்த அரசியலால் நாட்டுக்கோ மக்களுக்கோ நன்மை பயக்காது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனத்துக்கமைய தோட்ட சமூகத்துக்கும் வேலையற்ற இளைஞர்களுக்கும், விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத தரிசு காணிகளை வழங்கி, அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் என வாக்குறுதி வழங்கியிருந்தோம்.

ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறான முற்போக்கு யோசனைகளை முன்வைத்திருந்த போதிலும், இந்த அரசாங்கத்தினது பொய் அரசியலை நம்பி வாக்களித்து தெளிவான அதிகாரத்தை மக்கள் பெற்றுக் கொடுத்தனர். என்றாலும் துரதிஷ்டமாக இன்று இந்த மக்கள் கை விடப்பட்டுள்ளனர். முன்னைய அரசாங்கங்கள் கூறிய பொய்களோடு சேர்த்து தற்போது புதிய வகையான பொய்களையும் இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் கூறி வருகின்றது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More