சகாப்தம்!
கடந்தோம் இலங்கையிலே!
இன்று,
ஓர் இனமாக
தேசியம் கலந்தோம்
இலங்கையிலே…
தேயிலைக்கு அடியிலே
தேங்காயும் மாசியும்
கிடக்கிறதென,
பெரிய கங்காணிகளின்
சூட்சுமத்திற்கு சூறையாடப்பட்ட ஏதிலிகளாய் நாடு கடந்தோம்!
அண்டைய தேசத்தின் தென்னகத்திலிருந்து…
காடுகளையும் மேடுகளையும், கழனிகளாக மாற்றினோம்!
இத்தேசப் பொருளாதாரத்தில்
பெரும் புள்ளியானோம்!
உழைக்கும் மக்களின்
உபரி உழைப்பு!
கங்காணிகள் களவாட
எத்தனித்த
எம் தேசத்தாய்களின் கற்பு!
குழி வெட்டி,
கூன் விழுந்த முதுகு!
இவை ஏழ்மையின்
அடையாளங்களல்ல!
வரலாற்றால் வரையமுடியாத
வடுக்களின் காவியங்கள்!
சுவையான தேநீரால்
உலகை உபசரித்தோம்!
பஞ்சம் பிழைக்க வந்த சீமையிலே!
தப்பு இசைத்தோம்!
காமன் நாட்டினோம்!
கலைகளை ஊட்டி வளர்த்தோம்!
உதிரம் உறிஞ்சும்
அட்டைகளுக்கு உணவானோம்!
ஆயிரம் ரூபா ஊதியத்திற்காக,
ஓராயிரம் அடக்குமுறைகளுக்கு அடிப்பணிந்தோம்!
நாடற்றவன் வீடற்றவன் என்ற விலாசங்களால் விலங்கிடப்பட்டோம்! இந்திய வம்சாவளி
இலங்கைத் தமிழராய்,
பின்வந்த
பிறப்புச்சான்றிதழ்களில் பிரசுரிக்கப்பட்டோம்!
பிரபஞ்ச பெருவெளியில் பெருங்கனவுகளை சுமந்தபடி,
சபிக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஏமாற்றங்களை சுமந்தபடி,
ஏதிலிகளாக புறப்படுகின்றோம்!
ஒருநாள்,
எம் இனமும் ஜெயிக்கும்,
என்ற
பெருநம்பிக்கையில்…
ரவிசந்திரன் கஜன்
பேராதனைப் பல்கலைக்கழகம்