வடிவேலு நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு, சுந்தர் சி உடன் இந்த படத்தில் இணைந்துள்ளார். எனவே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் முதல் கட்ட விமர்சனங்கள் எதிர்மறையாக வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடசாலையொன்றில் சில தவறான செயல்கள் செய்யப்படுவதால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும் சூழ்நிலையில், அந்த பாடசாலையின் ஆசிரியர் கெத்தரின் தெரசா உயர் அதிகாரிக்கு புகார் அளிக்கிறார். அவர்கள் இரகசிய பொலிஸான சுந்தர்சியை, ஆசிரியராக அந்த பாடசாலைக்கு அனுப்புகிறார்கள். அவர் அங்கு ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்தாரா என்பது தான் இந்த படத்தின் கதை.
நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு மீண்டும் நகைச்சுவை பக்கம் திரும்பியதால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக சுந்தர் சி – வடிவேலு ஜோடி அசத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் படத்தில், சில இடங்களைத் தவிர, பெரியளவில் நகைச்சுவை இல்லை; ஒருசில இடங்களில் பழைய வடிவேலு நினைவுக்கு வந்தாலும், பல காட்சிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று கூறப்படுகின்றது.
சுந்தர் சி – வடிவேலு நகைச்சுவையை அடுத்து, சந்தான பாரதிக்கு அழுத்தமான கதாபாத்திரம் அமைந்திருந்தாலும், அவர் இரண்டாம் பாதியில் காணாமல் போய்விட்டதால் படம் சோர்வை நோக்கி செல்கிறதாம்.
கெத்தரின் தெரசா ஆரம்பத்தில் நன்றாக நடித்தாலும், அதன் பிறகு அவர் கவர்ச்சி பக்கம் சென்று விடுவதால், அவருடைய பங்கும் இரண்டாம் பாதியில் முக்கியத்துவம் இல்லாமல் போயிருப்பதாகக் கூறுகின்றனர்.
இருப்பினும், நடைமுறையில் சாத்தியமா என்று கருதாமல், குடும்பத்தோடு ஒரு சில இடங்களில் சிரிக்கலாம் என்றால் மட்டும் இந்த படத்தை பார்க்கலாம் என்று படம் பார்த்த இரசிகர்கள், கருத்து தெரிவித்துள்ளனர்.