தயாரிப்பு : பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் & அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்
நடிகர்கள் : சுந்தர் சி, வடிவேலு, கெத்ரின் தெரசா, வாணி போஜன், மைம் கோபி, முனீஸ்காந்த், ஹரீஷ் பெராடி,பக்ஸ் பகவதி பெருமாள் மற்றும் பலர்.
இயக்கம் : சுந்தர். சி
மதிப்பீடு : 2.5 / 5
வடிவேலு – சுந்தர் சி கூட்டணியில் உருவான நகைச்சுவை படம் என்பதால், பட மாளிகையில் வெளியாகி இருக்கும் ‘கேங்கர்ஸ் ‘ படத்தை பார்த்து இரசிக்க, அனைத்து தரப்பு இரசிகர்களும் சென்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
ஒரு கும்பல் பாதுகாத்து வரும் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த நூறு கோடி ரூபாயை.. குறைந்தபட்ச அறிவு கொண்ட கும்பல் ஒன்று கொள்ளையடிக்க திட்டமிடுகிறது. இதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா ? இல்லையா? என்பது தான் இப்படத்தின் ஒரு வரி கதை.
இதற்காக உருவாக்கப்பட்ட திரைக்கதையில் முதல் பாதி முழுவதும் எந்தவித சிரிப்பையும் வரவழைக்காமல் எரிச்சலுடன் கடந்து செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில்.. அதிலும் கொள்ளையடிப்பதற்கான திட்டமிடலும், அதற்கான செயல்பாட்டிலும் பார்வையாளர்களுக்கு சிரிப்பு உறுதி.
சுந்தர் சி படம் என்றால் கதை இருக்காது. ஆனால் சுவாரசியமான திருப்பங்களும், வேடிக்கையான விடயங்களும் இருக்கும். இதிலும் அப்படியே அவருடைய முத்திரைகள்… பாணிகள் … அணுகுமுறைகள்…எல்லாம் இருக்கிறது. ஆனால் கொஞ்சமாக இருக்கிறது.
இரண்டாம் பாதியில் ‘மத கஜ ராஜா ‘ படத்தின் ஐடியாவை இடைசெருகலாக நுழைத்தது நன்றாக இருந்தது.
வடிவேலு முதலில் சிரிக்க வைக்க கஷ்டப்பட்டாலும்.. இரண்டாம் பாதியில் பல இடங்களில் தன்னுடைய வழக்கமான நடிப்பால் சிரிக்க வைக்கிறார். அவருடைய கெட்டப்புகள் சிறப்பாக இருக்கிறது.
வடிவேலுக்கு நிகராக சுந்தர் சியும் தன் அனுபவம் மிக்க நடிப்பை வழங்குகிறார். நடிகை வாணி போஜன் -பாரம்பரிய மரபார்ந்த சினிமா நாயகி போல் ஊறுகாய் அளவிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவரின் நடிப்பும் சிறப்பு. பாடசாலையில் மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஆக இருந்தாலும் கவர்ச்சியாக நடனமாடுவார்கள் என்ற சுந்தர் சியின் உலகத்தை இரசிப்பவர்களும் உண்டு.
சுந்தர் சி – வடிவேலு – கெத்ரின் தெரசா – வாணி போஜன் – ஆகியோர்களை கடந்து இரசிகர்களை ஹரிஷ் பெராடி – பக்ஸ் பகவதி பெருமாள்- முனீஸ்காந்த் – ஆகியோரும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பின்னணி இசை.. இவை இரண்டும் வணிகத்தனமாகவே இருக்கிறது.
கேங்கர்ஸ் – கொமடி கிராக்கர்ஸ்