வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தற்போது கிடைத்து வரும் மழை மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழையாகும். அதனால் நண்பகல் வரை கடுமையான வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலவும். பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் மழை கிடைக்கும்.
இது மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழை என்பதனால் இது இடி மின்னல் நிகழ்வுகளோடு கூடிய மழையாகவே கிடைக்கும்.
அதிலும் இந்த இடி மின்னல் நிகழ்வுகளின் போதான மின்னேற்றம் முகில்களுக்கும் புவி மேற்பரப்பிற்குமிடையில் பரிமாற்றப் படுவதனால் குத்தான இடி மின்னலாகவே இருக்கும்.
இடி மின்னல் வகைகளில் இதுவே அதிக சேதத்தை ஏற்படுத்த வல்லன. எனவே இது தொடர்பாக மக்கள் அவதானமாக இருப்பது அவசியம். அதேவேளை எதிர்வரும் 10 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
பொதுவாக தமிழுக்கு சித்திரை 28 என்பது சித்திரைக் குழப்பத்தின் மைய நாளாகக் கருதப்படும். சித்திரை ஒரு சிறு மாரி என்ற கருத்தும் எம் மத்தியில் உள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி உருவாகும் தாழமுக்கம் இவ்வாண்டின் சித்திரைத் குழப்பத்தின் தோற்றுவாயாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாழமுக்கம் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கணிசமான அளவு மழையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சித்திரைக் குழப்பமே தென்மேற்குப் பருவக்காற்று உடைவுக்கும் காரணமாக அமைவதுண்டு. அந்த வகையில் இவ்வாண்டு தென் மேற்கு பருவமழை மே மாதத்தின் பிற்பகுதியில் உருவாகும் வாய்ப்புள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.