கனடா பிரதமர் மார்க் கார்னி, அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். அதன்படி, கனடா புதிய அமைச்சரவையில் 28 அமைச்சர்களையும், 10 வெளியுறவுச் செயலாளர்களையும் அவர் நியமித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
“கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கின்றேன்” என, சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இதற்கு முன்னதாகவே ஹரி ஆனந்தசங்கரி, பூர்வகுடிகள் துறைக்கான அமைச்சு மற்றும் நீதித்துறை உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகுத்துள்ளார். அத்துடன், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார்.
ஹரி ஆனந்தசங்கரி, 2015 நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில், இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதற்தடவையாக பாராளுமன்றம் சென்றார்.
ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான வி.ஆனந்தசங்கரியின் மகன் ஆவார். 13 வயதில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த இவர், புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றில் பல அரிய செயல்களைச் செய்துள்ளார்.
கனடாவில் தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்ட வன்முறை சார்ந்த ஒரு கலாசாரத்தை அழிப்பதற்கான கனடிய தமிழ் இளைஞர்கள் சேவை நிலையத்தை ஆரம்பித்து, கனடாவில் தமிழ் இளைஞர்களின் முரண்பாடுகளைத் தீர்க்கப் பாடுபட்டவர். அதேபோல, கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.
இதேவேளை, கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மெலானி ஜோலிக்கு பதிலாக, அனிதா ஆனந்துக்கு அந்தப் பதவி மாற்றப்பட்டுள்ளது.
அனிதா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஆவார். அனிதாவின் பெற்றோர், 1960களின் தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.