ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன கூட்டமைப்பான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு அமைப்பு (IPC) அதன் சமீபத்திய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில், காசாவில் 50 இலட்சம் பொதுமக்கள், அதாவது ஐந்தில் ஒருவர் கடுமையான பசியை எதிர்கொள்கிறார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காசாவில் உணவுப் பாதுகாப்பு நிலைமை, 2024 ஒக்டோபர் கடைசி மதிப்பீட்டிலிருந்து கணிசமாக மோசமடைந்துள்ளதாகவும், அங்கு வாழும் பாலஸ்தீனியர்கள் பஞ்சத்தின் கடுமையான அபாயத்தை எதிர்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியப் பொருட்கள் ஏற்கனவே பெரும்பாலான இடங்களில் தீர்ந்து போயுள்ளன. சில இடங்களில், வரும் வாரங்களில் அது முடிந்துவிடும். அனைத்து மக்களும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ. நாவின் உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரிக் பெப்பர்கார்ன், “மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தப் பஞ்சம், உணவு கிடைக்காத ஒரு முழு தலைமுறை குழந்தைகளையும் என்றென்றும் பாதிக்கும்” என்று எச்சரிக்கிறார்.
காசாவில் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் கடந்த 10 வாரங்களாக இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.