தயாரிப்பு : யாக்கை ஃபிலிம்ஸ்
நடிகர்கள் : ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா, ஹரிப்பிரியா, சங்கர் நாக் விஜயன், ஜீவா ரவி, மகேஸ்வரி, ஹைடு கார்த்தி மற்றும் பலர்.
இயக்கம் : ஜெயவேல் முருகன்
மதிப்பீடு : 2.5 / 5
நான்கு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த சிறிய முதலீட்டு திரைப்படமான ‘வருணன்’ எனும் இந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் வலிமை வாய்ந்த தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான அன்புச் செழியனின் ஆதரவினால் பட மாளிகையில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
வட சென்னையில் ராயபுரம் எனுமிடத்தில் பனைமரத்தொட்டி எனும் பிரபலமான பகுதியை கதைக் களமாக கொண்டு இப்படத்தின் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஆண்டவர் வாட்டர் சப்ளை மற்றும் ஜோன் வாட்டர் சப்ளை என்று இரண்டு குடிநீரை விநியோகிக்கும் முன்னணி சில்லறை முகாமையாளர்கள்- மக்களுக்கு குடிநீரை விநியோகித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கான வணிக எல்லையை புரிதல் அடிப்படையில் பிரித்து வைத்துக் கொண்டு இயங்குகிறார்கள். இந்த நிறுவனத்திற்கு தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து தில்லை ( துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ்) என்ற ஒரு இளைஞன் பணியில் சேருகிறான். குடிநீர் வினியோகம் என்பது ஒவ்வொரு வீட்டின் சமையல் அறை வரை நீளும் என்பதால் தில்லைக்கு அப்பகுதியில் உள்ள சிட்டு ( கேப்ரியல்லா) என்ற இளம் பெண் மீது காதல் ஏற்படுகிறது.
அதே தருணத்தில் ஜோன் வாட்டர் சப்ளை என்ற நிறுவனத்தை நடத்தி வரும் உரிமையாளரான சரண்ராஜிற்கு தெரியாமல் அவருடைய மனைவிராணி( மகேஸ்வரி) யும் மனைவியின் தம்பி டப்பா( சங்கர் நாக் விஜயன்) வும் சுண்ட கஞ்சி எனும் தடை செய்யப்பட்ட போதை உணவை தயாரித்து திருட்டுத்தனமாக விற்பனை செய்கிறார்கள். இதனால் காவல்துறை அதிகாரியான மதுரை வீரன்( ஜீவா ரவி) இவர்களை கண்காணிக்க தொடங்குகிறார்.
ஒரு புள்ளியில் காவல்துறை அதிகாரியான மதுரை வீரன்- ஆண்டவர் வாட்டர் சப்ளை நிறுவன உரிமையாளரான அய்யாவு( ராதாரவி)விடம் கூட்டு சேர்ந்து குடிநீரை விற்பனை செய்யலாம் என தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். இதற்கு அய்யாவு மறுப்பு தெரிவிக்க, இவருடைய போட்டியாளரான ஜோனிடம் உறவு வைத்துக் கொண்டு தண்ணீர் விநியோகத்தில் குளறுபடியை ஏற்படுத்துகிறார் மதுரை வீரன்.
இந்நிலையில் ராணிக்கும், தில்லையின் வீட்டில் வசிக்கும் அக்னி( ஹரி ப்ரியா ) என்ற பெண்ணிற்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் சிறிய அளவிலான சண்டை ஏற்படுகிறது. அது பூதாகரமாக மாறுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் வருணன் படத்தின் கதை.
கதையில் எந்த புதுமையும் இல்லை. வழக்கமான பழிக்கு பழி பழிவாங்கும் கதையை தண்ணீர் கேன் சப்ளை செய்யும் கதாபாத்திரங்கள் வழியாக விவரித்திருக்கிறார்கள். இதில் பாராட்டப்பட வேண்டிய முதன்மையான அம்சம் ஒளிப்பதிவு. சிறிய முதலீட்டு திரைப்படம் என்றாலும் ஒவ்வொரு காட்சிகளும் நேர்த்தியாகவும், ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஒளிப்பதிவாளரை ( எஸ். ஸ்ரீ ராம சந்தோஷ் – பி. சி. ஸ்ரீராமின் உதவியாளர்) ) தாராளமாக கை வலிக்க கைகுலுக்கி பாராட்டு தெரிவிக்கலாம். அதே தருணத்தில் ஒரே காட்சி அமைப்பு திரும்ப திரும்ப வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.
பார்வையாளர்கள் யூகிக்க கூடிய வகையில் கதை பயணிப்பதால் எதிர்பார்ப்பை விட சோர்வு தான் மிஞ்சுகிறது.
சின்னத்திரை தொடர்களில் பிரபலமான ஹரிப்பிரியா இப்படத்தில் தோன்றி ரசிகர்களை வியக்க வைக்கிறார். தில்லை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் கதையின் நாயகனுக்குரிய அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்கிறார். சிட்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை கேப்ரியல்லாவின் இளமை ரசிகர்களுக்கு பிளஸ்.
பாடல்களும் பின்னணி இசையும் படமாளிகை ரசிகர்களுக்கு ஆறுதலை தருகிறது.
அனுபவமிக்க நடிகர்களான ராதா ரவி, சரண்ராஜ் இருவரும் திரையில் தோன்றி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் திரைக்கதையின் வலுவின்மையால் காட்சிகளின் போதாமையால் தங்களின் திரை இருப்பை இயக்குநரின் வரம்பு எல்லைக்குள் சுருக்கிக் கொள்கிறார்கள். ஜோன் கதாபாத்திரம் – பேசுவதில் சவால் உள்ள கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருப்பது திரைக்கதைக்கு வலு சேர்க்கவில்லை.
வருணன் – வறட்சி