‘காக்கா முட்டை’ எனும் தேசிய விருதினை வென்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் விக்னேஷ், ‘ சென்ட்ரல் ‘ எனும் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகும் ‘சென்ட்ரல் ‘ எனும் திரைப்படத்தில் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், சோனேஸ்வரி ,இயக்குநர் பேரரசு , ‘சித்தா’ தர்ஷன், ‘ஆறு’ பாலா , ‘மேதகு ‘ராஜா , அன்பு ராணி, கவி நிலவன், ஓம் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இலா இசையமைத்திருக்கிறார். உழைப்பாளர்களின் மனிதவள சுரண்டலை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் வியாப்பியன் தேவராஜ்- சதா குமரகுரு – தமிழ் சிவலிங்கம் - ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து வாழ்வாதாரத்திற்காக சென்னை சென்ட்ரல் எனும் பகுதிக்கு இடம் பெயர்கிறான் நாயகன். அவன் சந்திக்கும் சூழலும், நெருக்கடியும் தான் இப்படத்தின் கதை. இப்படத்தின் முன்னோட்டம் வெளியானவுடன் ரசிகர்களிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.