நகைச்சுவை நடிகராக வெற்றி பெற்ற சூரி கதையின் நாயகனாக உயர்ந்து நடித்திருக்கும் ‘ மாமன் ‘ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
‘புரூஸ் லீ ‘எனும் திரைப்படத்தையும், ‘விலங்கு ‘எனும் இணையத் தொடரையும் இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்’ திரைப்படத்தில் சூரியுடன் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பிரபலமான முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு , தமிழுக்கு அறிமுகமாகி இருக்கும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். இதற்கான பிரத்யேக வெளியீட்டு விழா நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னணி திரைப்பட இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ்- மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி கதாசிரியரும் , கதையின் நாயகனுமான சூரி பேசுகையில், ” குடும்பத்தில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும் தாய் மாமன் உறவு என்பது தனித்துவமானது.
விசேடமானது . பிள்ளைகளுக்கு பெற்றோர்களுக்கு நிகரான உறவு தான் தாய் மாமன். தாய் மாமன் உறவை பற்றி இதற்கு முன் நிறைய படங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஒரு பிள்ளைக்கும், அவனுடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக விவரித்திருக்கிறோம் ” என்றார்.