சமைப்போம் சுவைப்போம்
கறிரோல் மிக இலகுவாகவும் மிக வேகமாகவும் செய்ய கூடிய ஒன்று இதை சிற்றுண்டி வகைக்குள் அடக்கலாம் உணவாக இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் பசி எடுக்கும் போது எடுத்து கொள்ளலாம். அதை செய்வதற்கும் மிக குறைந்தளவான பொருட்களே தேவைப்படும் . கறிரோல் வகை உள்ளீட்டை நாம் பலவாறு தயாரித்துக்கொள்ளலாம்.இறைச்சி ,மீன் ,மரக்கறி போன்றவற்றை பயன்படுத்தலாம்.
இப்போது அதை தயாரிப்போம் .
கறிரோல் செய்ய தேவையான பொருட்கள்
பாண் தூள் -தேவையான அளவு
கோதுமை -1/4kg
எண்ணெய் -1/4 லிட்டர்
உருளைகிழங்கு -200g
வெங்காயம் – 2 சிறியது
பச்சை மிளகாய் – 3
கோவா – சிறிய துண்டு
கரட் – 1
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – சிறிது
செய்முறை :
முதலில் கோதுமையை சுத்தமான பாத்திரத்தில் சலித்து கொள்ள வேண்டும். அதன் பின் சிறிது உப்பை விட வேண்டும். நீரை சிறுது சிறிதாக ஊற்றி நன்கு பிசைந்து உருண்டைகளை பிடித்து வைக்க வேண்டும்.
பின் உருளை கிழங்கை கழுவி அவிக்க வேண்டும். அதன் பின் கரட் , கோவா , வெங்காயம் , பச்சை மிளகாய் போன்றவற்றை கழுவி சிறிதாக வெட்டி கொள்ள வேண்டும் .
பின் நன்றாக அவிந்த கிழங்கை மசித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது சட்டியை அடுப்பை மூட்டி வைத்துவிட்டு சட்டி காய்ந்ததும் எண்ணெய் சிறிது விட்டு மரக்கறிகளை விட்டு உப்பும் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறி கொள்ள வேண்டும். இறுதியாக மசித்து வைத்த கிழங்கையும் அதில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.இப்போது மிளகு தூள் தேவைக்கு ஏற்றாற் போல் சேர்த்து அதனை நன்கு சமைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இப்போது சிறுது கோதுமையை எடுத்து நீரில் கலந்து (தோசை பதத்தில்) வைத்து கொள்ள வேண்டும். முதலில் செய்து வைத்த மா உருண்டையை வீச்சு ரொட்டிக்கு வீசி எடுப்பது போல் செய்து எடுக்க வேண்டும். பின் அதில் சிறிது மரக்கறி கலவையை வைத்து ரோல் செய்து கரைத்து வைத்த மாவில் தோய்த்து பாண் தூளில் உருட்டி கொதிக்கும் எண்ணையில் ஒவ்வொன்றாக போடுக இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்து கொள்ள வேண்டும்.
கறிரோல் நன்கு brown color இல் வரும்வரை பொறித்து எடுத்து பரிமாறுங்கள் இதனை சுட சுட சாப்பிடுவதே மிகுந்த சுவையாக இருக்கும்.