காசா முழுவதையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் அறிவித்தார்.
அத்துடன், கடந்த மார்ச் மாதம் முதல் காசாவுக்கான மருத்துகள், உணவு மற்றும் எரிபொருள் நுழைவதை இஸ்ரேல் தடுத்துள்ளது, இதனால் வரவிருக்கும் பஞ்சம் குறித்து சர்வதேச நிபுணர்கள் எச்சரித்தனர்.
இந்நிலையில், நட்பு நாடுகளில் இருந்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்புக் கிளம்பியது.
இங்கிலாந்து, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நேற்றுக் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன.
அதில் நேதன்யாகுவின் திட்டம் மற்றும் 11 வாரங்களாக காசாவுக்குள் உணவு மற்றும் உதவிப்பொருட்கள் செல்ல விடாமல் செய்ததற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக சொற்ப அளவிலான உணவு மற்றும் உதவிகளை காசாவுக்குள் இஸ்ரேல் அனுமதித்துள்ளது. இருப்பினும், அதை கூட மக்களிடம் கொண்டு சேர்ப்பது சிக்கலாக உள்ளதாக ஐ.நா தெரிவித்தது.
இந்தச் சூழலில் இஸ்ரேலுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக இங்கிலாந்து அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இங்கிலாந்தில் உள்ள இஸ்ரேல் தூதருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி தெரிவிக்கையில், “இந்தப் புதிய சீரழிவை பார்த்து அமைதியாக இருக்க முடியாது. இது நமது இருதரப்பு உறவை ஆதரிக்கும் கொள்கைகளுடன் பொருந்தாது. வெளிப்படையாகச் சொன்னால், இது இங்கிலாந்து மக்களின் மதிப்புகளுக்கு அவமானம்.
“எனவே, இஸ்ரேலிய அரசாங்கத்துடனான இந்த புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை நாங்கள் நிறுத்திவிட்டதாக அறிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதேவேளை, காசாவில் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மீது இன்று (21) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.