செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பங்கு சந்தை பற்றி படிக்கலாம்.. வேலைவாய்ப்பு பெறலாம்..

பங்கு சந்தை பற்றி படிக்கலாம்.. வேலைவாய்ப்பு பெறலாம்..

3 minutes read

பங்கு சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்கு மற்ற எதிலும் கிடைக்காத அளவுக்கு வருமானம் கிடைப்பதோடு, இத்துறையில் எண்ணிலடங்கா வேலைவாய்ப்பும் இருக்கிறது.

‘‘பங்கு சந்தை என்பது பணம் முதலீடு செய்வதற்குரிய இடம் மட்டுமில்லை. அங்கு வேலைவாய்ப்பும் நிறைந்துள்ளது’’ என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், பாலாஜி. சென்னையை சேர்ந்தவரான இவர், நிறைய மாணவர்களுக்கு பங்கு சந்தை பற்றிய புரிதலை உருவாக்கி இருக்கிறார்.

பங்கு சந்தை எப்படி இயங்குகிறது?, வர்த்தகம் எப்படி நடக்கிறது?, முதலீடு செய்வது எப்படி?, லாபம் ஈட்டுவது எப்படி? என வர்த்தகம் சார்பான பல விஷயங்களை கல்லூரி மாணவர்களுக்கு விளக்குவதோடு, பங்கு சந்தையில் இருக்கும் வேலைவாய்ப்புகளையும், அதற்கான படிப்புகளை பற்றியும் விளக்குகிறார். அவர் பகிர்ந்து கொண்டவை இதோ…

  • பங்கு சந்தை, முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமா?

நிச்சயமாகவே முதலீடு செய்வதற்கான சிறப்பான தளம். பங்கு சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்கு மற்ற எதிலும் கிடைக்காத அளவுக்கு வருமானம் கிடைப்பதோடு, இத்துறையில் எண்ணிலடங்கா வேலைவாய்ப்பும் இருக்கிறது. விஷயம் தெரிந்தவர்கள் பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்வது மட்டுமின்றி, இத்துறையில் வேலைவாய்ப்பும் பெற்று வருகின்றனர்.

  • பங்கு சந்தையில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன?

நேரடியாக பங்கு சந்தையில் பணியாற்றும் வாய்ப்புகளும், பங்கு சந்தை மூலமாக வங்கிகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளும் நிறைய இருக்கிறது. பங்கு சந்தை நிறுவனங்களின் தகவல்களை ஆராயும் பணி தொடங்கி, முதலீடு செய்வது, அதை லாபகரமாக எடுப்பது, தகுந்த நேரத்தில் விற்பது, வாடிக்கையாளர்களுக்கு பங்கு சந்தை பற்றி ஆலோசனை வழங்குவது என பல பணிகள், பங்கு சந்தை நிறுவனங்களில் உண்டு. ஏன்..? பங்கு சந்தை சம்பந்தமான குறுகிய கால படிப்புகளை முடித்தவர்களைதான், தனியார் வங்கிகளில் பணியமர்த்துகிறார்கள்.

  • பங்கு சந்தை பற்றி எங்கு படிப்பது?

சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகமும், டிஜிட்டல் ஸ்கில் அகாடெமியும் இணைந்து இதற்கான பிரத்யேக சான்றிதழ் படிப்புகளை உருவாக்கி உள்ளன. இதில் யார் வேண்டுமானாலும் இணைந்து படிக்கலாம். சீனியர் பேங்கர், டிஜிட்டல் பேங்கிங், பேங்க் அண்ட் பினான்ஸ், இகுட்டி அண்ட் டெரிவிட்டிவ், மியூட்சல் பண்ட், செக்யூரிட்டி ஆபீஸர் அண்ட் ரிஸ்க் மேனேஜ்மெண்ட், இன்வெஸ்மெண்ட் அட்வைசரி அண்ட் போர்ட்போலியோ… இப்படி பங்கு சந்தை தொடர்பான 7 விதமான படிப்புகள் சென்னை ஐ.ஐ.டி.யில் வழங்கப்படுகிறது. இதில் இணைந்து படிப்பதன் மூலம் பங்கு சந்தை அறிவையும் வளர்க்க முடியும். வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பங்கு சந்தை சார்ந்த நிதி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை யும் பெற முடியும்.

  • கட்டணம் எவ்வளவு இருக்கும்? எத்தனை மாத பயிற்சி?

ரூ.2 ஆயிரம் தொடங்கி, ரூ.50 ஆயிரம் வரை படிப்பிற்கு ஏற்ப, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிகபட்சம் 6 மாதத்திற்குள் படிப்பை முடித்து, தேர்வு எழுதி சென்னை ஐ.ஐ.டி.யின் சான்றிதழ் பெற்றுவிடலாம். உலக தரம் வாய்ந்த ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் இந்த பயிற்சி வகுப்புகள் முன்னெடுக்கப்படுவதால், திறமையான விரிவுரையாளர்களை கொண்டு பாடத்திட்டம் நடத்தப்படுகிறது.

  • பாடத்திட்டம் எப்படி இருக்கும்?

‘கேஸ் ஸ்டெடி’ எனப்படும் கள ஆய்வுகளும், பங்கு சந்தை பற்றிய நிபுணர்களின் கருத்து கணிப்புகளுமே அதிகமாக இருக்கும். பாடமாக படிப்பது குறைவு. செய்முறை விளக்கங்களும், ‘கேஸ் ஸ்டெடி’ கட்டுரைகளுமே அதிகமாக இருக்கும்.

  • இந்த பயிற்சி, மாணவர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருக்கும்?

பங்கு சந்தை அறிவை வளர்த்துக் கொண்டு சுயமாகவே பங்கு சந்தை முதலீட்டில் களமிறங்கலாம். தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பங்கு சந்தை வர்த்தக நிறுவனங்களில் பணிக்கு சேரலாம். இவை இரண்டும் இல்லாத பட்சத்தில் சென்னை ஐ.ஐ.டி. வழங்கியிருக்கும் கல்வி சான்றிதழை கொண்டு பங்கு சந்தை தொடர்பான உயர் கல்விகளுக்கு செல்லலாம்.

  • யாரெல்லாம் படிக்கலாம்?

பங்கு சந்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் யார் வேண்டுமானாலும் இதில் இணைந்து படிக்கலாம். வணிகம், கலை-அறிவியல், என்ஜீனியரிங், டிப்ளமோ… இப்படி எல்லா படிப்புகளை முடித்தவர்களும், இதில் இணைந்து படிக்கலாம்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More