பொன் விளை செம்மண்ணில்
குருதியும் கலந்து, சிவந்த கரும் பொழுதுகளில்…
உயிர்களை ஈரப்படுத்தி,
உயிர்ப்பித்த தெய்வ அமுதம்!
நீரினுள் சிறிதளவு அரிசியிட்டு,
கிடைத்தற்கரிய உப்பையும் சேர்த்து
காய்ச்சப்பட்டதே இவ்வுணவு;
பசிப்பிணி வருத்த,
நீண்ட வரிசையில்
நின்றதனைப்பெற,
எத்தணிக்கையில் மாண்டோர் ஏராளம்…! ஏராளம்..!
கர்ப்பிணிப் பெண் ஒருத்தி
அவ்வரிய அமுதைப் பெற்றாள்.
ஒரு வாய் பருகும் முன்,
எறிகணையில் எமன் வந்தான்.
தாயும் அவள் மடி மகவும்
மடிந்த கோரம்…! கோழையின் வீரம்,
மனுவும் அல்லாமல்
நீதியும் அல்லாமல்
மடிந்தது அங்கே மனிதம்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி!
இது ஒரு பெரு வலி;
முட்கள் குத்திய வடு;
துயரின் உயிர்த் துடிப்பு;
விடுதலையின் குறிகாட்டி;
வேறு என்ன சொல்ல?
கலைமதி அனுராஜா