பயண அனுபவ புனைவிலக்கியப் பிரதியாக பின்னட்டை அறிமுகக் குறிப்போடு “கருப்புப் பிரதிகள்” வெளியீடாக 2018ல் வெளிவந்த மெலிஞ்சி முத்தனின் உடக்கு நாவல் நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்ததாக இன்று நிறைவுற்றது.
தேசங்கள் கண்டங்கள் தாண்டி உயிர்வாழ்தலுக்கான எல்லை கடத்தல்களின் அவஸ்தைகள், துயரங்கள் என பல்வேறு தேசத்தவர்களுடனான அனுபவங்களைப் பகிர்ந்தவாறு வாசகனை கூடவே அழைத்துச் செல்கிறது மெலிஞ்சி முத்தனின் எழுத்துக்கள்..
புலம்பெயர் இலக்கியம் என தனித்த ஓர் அடையாளத்தை பெற்றிருக்கும் “இலக்கியவகைமாதிரி” தந்துகொண்டிருக்கும் புனைவிலக்கியப் பிரதிகள் தற்போது தமிழ் நூல்களின் வெளியீட்டுச் சந்தையிலும்.. வாசிப்புச் சூழலிலும் முக்கிய இடம் பெற்றிருப்பது அதன் பன்முகத் தன்மையானதும் தனித்துவமானதுமான புனைவு வெளிப்பாடுகளாலேயே என்பதனை வாசிப்பு அனுபவத்திலிருந்து உணர்ந்து கொள்ளலாம் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்..
“புனைவுகளில் அகதி வாழ்வை புனைவது போரிலிருந்து தப்பியோடுதலைப் போன்றே அவதியானது. ஆனால் மனித வாழ்வின் பாடுகளை, நாடுகளை மொழிகளை தேசியங்களை கடந்து இன்னொரு தேசத்தில் வசித்து கொண்டு எப்படித்தான் இன்னொரு மனிதரிடம் தன் அனுபவத்தை கடத்துவது என்கிற போதுதான் இப்படியான தற்புனைவு இலக்கிய வகைமைகள் தன் சாளரத்தை திறக்கின்றன” என்ற நீலகண்டனின் நூல் பற்றிய குறிப்பு இந்த நூலுக்கான சுருக்க அறிமுகமாகும்..
“மரவர்ணமனிதன்” என அடையாளமிட்டவாறு மெக்சிகோவிலிருந்து தன் இறுதி இலக்கான கனடாவின் எல்லைவரைச் சென்று இறந்து போகும்வரைக்குமான இடைப்பட்ட காலங்களினதும் தூரங்களினதும் கதையாக நகரும் இந்நூல்; வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பிற மனித வாழ்நிலைகள் முக்கியமானதென்று நினைக்கிறேன்..
சிறிய அத்தியாயங்களால், வாசிப்பவர்களை சலிப்பில்லாமல் 149 ம் பக்கம் வரைக்கும் அழைத்துச் செல்லும் மெலிஞ்சி முத்தனின் இந்தப் புனைவிலக்கியப் பிரதி தந்த வாசிப்பனுபவங்கள் அலாதியானது.
(எல்லைகடத்தல்களின் முக்கிய நிலப்பகுதியாக மெக்சிகோ இருக்கிறது என அறியமுடிகிறது.. இது டிசே இளங்கோவின் “மெக்சிகோ” என்ற புனைவிலக்கியப் பிரதியை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது)
“பிரண்டையாறு” (சிறுகதைகள்) “அத்தாங்கு” (நாவல்) என இன்னும் இரண்டு இலக்கியப் பிரதிகளை தந்திருக்கும் மெலிஞ்சி முத்தனுக்கு வாசக நன்றிகள்..
–Mkm Shakeeb நன்றி முகப்புத்தகம்.