செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோஸப் மறைவு

மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோஸப் மறைவு

1 minutes read

பதுளை மாவட்டம் ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934-ல் பிறந்தவர். கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள் படித்தார். பின்னர் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.

தெளிவத்தை என்ற ஊரில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் பெயருடன், தான் வாழ்ந்த ஊரின் பெயரையும் இணைத்துக்கொண்டார்.

1960-களில் தமிழ் இலக்கியத் துறையில் தடம் பதித்து, பலராலும் அறியப்படும் படைப்பாளியாக மாறினார். ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதினார். பிறகு குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வுக் கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி நாடகம், திரைப்படக் கதை எனப் பல தளங்களில் தடம் பதித்தார்.

இலங்கை மலையகம் பற்றி அறியவேண்டும் என்றால், இவரது படைப்புகளைப் படித்தால் போதும் என்கிற அளவுக்கு அந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நிலவரங்களை இவரது படைப்புகள் எடுத்துக் கூறின.

‘காலங்கள் சாவதில்லை’ என்பது இவரது முக்கியமான நாவல். அவரது ஆய்வு நூல்களான ‘20-ம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு’, ‘மலையக சிறுகதை வரலாறு’ ஆகியவை இவரைச் சிறந்த ஆய்வாளராக அடையாளம் காட்டின.

தனது படைப்புகள் மூலம் மலையக எல்லையைக் கடந்து இலங்கை அளவில் பேசப்படும் ஈழத்தின் முக்கியப் படைப்பாளியாகத் திகழ்கிறார். பல்வேறு பத்திரிகைகளுக்காக பல புனைப்பெயர்களில் இலக்கிய கட்டுரைகள், இலக்கிய குறிப்புகள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கியத் தகவல்களை அளித்துள்ளார்.

பல பத்திரிகைகள், இலக்கிய அமைப்புகள் நடத்திய குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுப்புக்காக இலங்கை சாகித்ய விருதை வென்றுள்ளார். இவரது ‘குடைநிழல்’ புதினம் 2010-க்கான யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதை வென்றது. 2013- க்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.

இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் இவரை அழைத்து கவுரவித்துள்ளன. சிறந்த இலக்கிய விமர்சகர், வழிகாட்டியாகச் செயல்பட்டுவரும் இவரிடம் பலர் தங்கள் நூல்களுக்கான முன்னுரைகளைக் கேட்டுப் பெறுகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More