கர்ப்பகாலத்தில் உங்கள் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். பிரசவத்தின் பின் சரியாகி விடும் என்று நினைத்தால், பிரசவத்தின் பின்னும் கூட சில மாற்றங்கள் ஏற்படும். கர்ப்பகாலம் என்பது மாதவிடாய்க்கு விடுமுறை காலம் போன்றது. கர்ப்பகாலம் முழுவதும் மாதவிடாய் ஏற்படாது. ஆனால் பிரசவத்தின் பின் ஏற்பட தொடங்கி விடும். இங்கு பிரசவத்திற்கு பின்னான மாதவிடாய் சுழற்சி எப்போது துவங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
மாதவிடாய் என்பது கர்ப்பப்பையில் குழந்தை இல்லை என்பதற்கான அறிகுறியாகும். அதனால் கர்ப்பப்பையில் உள்ள திசுக்கள் உதிர்ந்து ரத்தமாக வெளியேறுகிறது. ஆனால் நீங்கள் கர்ப்பமான பின் மாதவிடாய் நின்று விடும். சில நேரங்களில் லேசான ரத்த போக்கு இருக்கும். ஆனால் இந்த நிலை தொடந்தாலோ அல்லது அதிக ரத்த போக்கு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் ஐந்து முதல் ஆறு வாரங்களில் மாதவிடாய் ஏற்படும். முழுக்க முழுக்க தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு மாதவிடாய் ஏற்படும். எனினும் இது ஒவ்வொரு பெண்ணிற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடும் என்பதால், இது தான் சரி என்று இதில் வரையறுக்க முடியாது.
பிரசவத்திற்கு பின் உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அது பழைய மாதிரி இருக்காது. இரத்த போக்கு லேசாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். மாதவிடாய் சுழற்சி பழைய நிலைக்கு திரும்ப சிறிது காலம் எடுக்கும். ஆனால் நீண்ட நாட்களுக்கு லேசான அல்லது அதிகமான ரத்த போக்கு நீடித்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
உங்கள் கருப்பையில் இருந்து முட்டை வெளியான பிறகு உடனே மாதவிடாய் சுழற்சி ஏற்படாது. அதுவும் குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு. இதனால் உடல் உறவு கொள்ளும் போது கவனமாக இருங்கள்.
உங்களையும் உங்கள் சுற்றத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மாதவிடாய் நேரத்தில் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துங்கள். மேலும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.