வங்கதேசத்தைச் சேர்ந்த 285 தொழிலாளர்களை இந்தோனேசியா வழியாக மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மீண்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவில் உள்ள வங்கதேச தூதரகம் தெரிவித்துள்ளது.
இவர்களை வங்கதேசத்திலிருந்து இந்தோனேசியாவுக்கு விமானம் வழியாக அழைத்துச் சென்ற கடத்தல்காரர்கள், நேரடியாக விசா பெறும் வசதியை பயன்படுத்தி இந்தோனேசியாவுக்குள் அழைத்துச்சென்றுள்ளனர்.
இவ்வாறு, வங்கதேசிகளுக்கு இந்தோனேசிய அரசு வழங்கும் வசதியை தவறாக பயன்படுத்தும் கடத்தல்காரர்களையும் கடத்தலை தடுக்கவும் வலுவான வழக்கு விசாரணையும் அவசியம் என மனித உரிமை செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதற்காக இக்கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கடத்தல்களில் சிக்கி மீண்டும் வங்கதேசம் திரும்பியுள்ள 23 வயது ஷாஹின், “டாக்காவிலிருந்து வந்த தரகர் மலேசியாவிலிருந்து வாங்கித்தருவதாக உறுதியளித்தார். மலேசியா சென்றடைந்த பின் 2 லட்சம் வங்கதேச டக்கா ( சுமார் 1.66 லட்சம் இந்திய ரூபாய்) தர வேண்டும் என்கிறார்.” என இந்தோனேசியா சென்ற நிகழ்வை விவரித்துள்ளார்.
நாங்கள் கடுமையான வறுமையில் இருக்கிறோம். 5 பேர் கொண்ட எங்கள் குடும்பத்தை நடத்த போதுமான பணத்தை சம்பாதிக்க முடியவில்லை. எனது மகனுக்கு ஏதேனும் வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும், என வங்கதேச பிரதமருக்கு ஷாஹினின் தாயார் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்ரா மாகாணத்தில் உள்ள மேடன் நகரில் கிடங்கு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 285 வங்கதேசிகளை இந்தோனேசிய காவல்துறை மீட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.