ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியேற்றம் செய்யப்படவிருக்கின்றனர்.
இதற்காக பப்பு நியூ கினியாவிலிருந்து அவர்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த ஆயிரக்கணக்கான அகதிகள் மனுஸ் தீவில் (பப்பு நியூ கினியா ) அமைந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலிய அரசு மறுத்து வந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா – அமெரிக்கா இடையே இந்த அகதிகளை மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் படி, மனுஸ் தீவிலிருந்து இதுவரை 189 அகதிகள் அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் றிண்டோல் தெரிவித்துள்ளார்.
இதேபோல், நவுருத்தீவில் அமைந்திருக்கும் மற்றுமொரு ஆஸ்திரேலிய முகாமிலிருந்து 300 அகதிகள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1250 அகதிகளை ஏற்றுக்கொள்வதாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி இதுவரை 500 பேர் மட்டுமே அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் மிகவும் மெதுவாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. என அதிருப்தி வெளியிட்டுள்ளார் ஐன் றிண்டோல். 2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லை பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறையப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகிறது. 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் படகு வழியே வந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் நவுரு மற்றும் மனுஸ்தீவு தடுப்பு முகாம்களில் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.