ஆஸ்திரேலிய டென்னிஸ் ரசிகர்களுக்கு இன்று மதியம் இன்ஸ்டக்ராம் வழியாக ஒரு இடி விழுந்தது. அந்தச் செய்தி உலகெங்கும் பரவிய அடுத்த நொடியே வெளிநாட்டு ஊடகங்களும் கதற ஆரம்பித்தன. மகளிர் டென்னிஸ் உலகின் “நம்பர் 1” வீராங்கனையாக கடந்த 120 வாரங்களாக உச்சத்திலிருந்த ஆஸ்திரேலிய தங்க மங்கை Ash Barty, டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.
அவருக்குத் தற்போது வயது 25. இந்தச் செய்தியைக் கேட்டால், யாருக்குத்தான் தாடை விழாது?
ஆனால், ஆஷ் மிகச் சாதாரணமாகத் தனது ஓய்வை அறிவித்திருப்பது மாத்திரமல்லாமல், கடந்த ஒரு வருடமாகவே தான் ஓய்வு பெறுவதற்கு யோசித்துக்கொண்டிருந்ததாகக் கூறியிருக்கிறார். டென்னிஸ் உலகிற்கு இனிமேல் கொடுப்பதற்குத் தன்னிடம் எதுவும் இல்லை என்றும் தனது உடலும் மனதும் இந்த விளையாட்டில் முனைப்புடன் விளையாடுவதற்கான ஈர்ப்பை இழந்துவிட்டது என்றும் காரணம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ஊடகங்கள் விட்டபாடில்லை. “என்னதானிருந்தாலும் ஒரு நியாம் வேண்டாமா தாயி” – என்கிற கணக்கில், ஆஷ் பார்ட்டியை அகன்ற தாச்சி ஒன்றில் போட்டு, இன்று மதியம் முதல் வறுத்துக்கொண்டிருக்கின்றன.
ஆஸ்திரேலிய பூர்வகுடிப் பெண்ணான ஆஷ் பார்ட்டியின் விளையாட்டுத்துறை மிகவும் வித்தியாசமானது. அவர் டென்னிஸ் மாத்திரமல்லாமல் கிரிக்கெட்டிலும் ஈடுபாடு உடையவர். 14 வயதில் டென்னிஸ் களத்தில் இறங்கிய ஆஷ் பார்ட்டி, மின்னல் வேகத்தில் தனது வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார். மிகக்குறுகிய காலத்தில் டென்னிஸின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். டென்னிஸ் விளையாடத் தொடங்கி நான்கு வருடங்களிலேயே, தனக்கு சிறு ஓய்வு தேவை என்றும் திடீரெனக் கிடைத்த படோபகாரங்களினால் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் உள்ளது என்றும் கூறி சற்று ஒதுங்கினார்.
அப்போதுதான், தனக்கிருந்த கிரிக்கெட் மீதான ஈடுபாட்டினை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கான தனது தகுதியை வெளிப்படுத்துவதற்குத் தயார் என்றுகூட அறிவித்தார். அதற்காக, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடினார். ஒரு ஆட்டத்தில் 60 பந்துகளில் 63 ஓட்டங்களை விளாசினார். அதன்பிறகு, ஆஸ்திரேலிய Bigg Bash தொடரிலும் பங்கு பற்றி விளையாடியிருந்தார்.
ஆனால், ஆஷ் பார்ட்டியை சூழ்ந்திருந்த அழுத்தம் – அவரை அறியாமலேயே – மீண்டும் மீண்டும் டென்னிஸ் ஆட்டத்தின் வழி தள்ளியது. இப்போது திரும்பிப் பார்க்கும்போது, எப்படியாவது இந்த விளையாட்டினை ஆடி முடித்துவிடவேண்டும் என்று விளையாடியிருக்கிறாரோ என்றுகூடத் தோன்றுகிறது.
மூன்று தடவைகள் தனி ஆட்டத்தில் grand slam பட்டங்கள் உட்பட 15 வெற்றிகள், 12 இரட்டையர் வெற்றிகள் என்று டென்னிஸ் உலகில் தங்க மங்கையாகத் தன்னை நிலைநிறுத்தினார்.
இந்த வருடம் மெல்பேர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸில் வெற்றிக்கோப்பையை சுவீகரித்த ஆஷ் பார்ட்டி, பூர்வீக மக்களின் புனிதக்கோயில் என்று வர்ணிக்கப்படும் Uluru மலையடிவாரத்தில் வெற்றிக்கோப்பையோடு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம், பலருக்கு உறைக்கக்கூடிய ஒற்றைச் செய்தியை ஓங்கி ஒலித்திருந்தது.
இன்று சுமார் 47 மில்லியன் டொலர் சொத்துக்களுக்கு அதிபதியாக – ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் ஒருவர் ஈட்டிய அதிகூடிய வெற்றிப்பணத்திற்கு சொந்தக்காரி என்ற பெருமையோடு – ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கும் ஆஷ் பார்ட்டி, 25 வயதிலேயே தனது டென்னிஸ் ரக்கெட்டை தூரமாக வைத்துவிட்டு, தனக்குப் பிடித்த கனவு இல்லத்தைக் கட்டிக்கொண்டு, நீண்டநாள் காதலரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார்.
காலம் எல்லோருக்கும் பாரபட்சமின்றி வாய்ப்புக்களை வழங்குகிறது. அதனை சிலர் வேகமாகச் சமைத்துச் சுவைத்துவிடுகிறார்கள். மீதிப்பேர் வேக வைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். ஷேன் வோர்னின் வாழ்க்கை ஒருவிதத்தில் போதனை என்றால், ஆஷ் பார்ட்டியின் வாழ்க்கை இன்னொரு வகையில் படிப்பினை.
எழுத்தாளர் ப. தெய்வீகன்