2
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி வரலாற்றுடனான நமது இளம்பராய இணைப்பை – பிணைப்பை ஆசிரியர்கள் தவிர யாரால் பலப்படுத்த முடியும்? அத்தகைய ஆசிரியர்களுள் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்துள்ளவரே ஆசான் துரைச்சாமி மாஸ்டர்.
யாழ்ப்பாணத்தின் புகழை உலகெங்கும் பரவிடச் செய்த சென்ஜோன்ஸ் கல்லூரியில் நீண்டகாலம் கனிஷ்ட பிரிவின் தலைமை ஆசிரியராக (Lower School Head Master) பணியாற்றிய வைத்தியலிங்கம் துரைச்சாமி (30/06/1925 – 18/04/2023) அவர்கள் மெல்பேர்ணில் இறைபதமடைந்தார்.
ஆசிரியர் ஒருவர் தன் பணியை ஆழமாக நேசித்து மாணவர்கள் மேல் நிபந்தனையில்லாத நம்பிக்கையும் கொண்டிருந்தால் அவர் காலங் காலமும் நினைக்கப்படுவார் என்பதற்கு நிகரற்ற உதாரணம் எங்கள் தலைமை ஆசிரியர் துரைச்சாமி மாஸ்டராவார்.
அறிவின் துளிகளை அள்ளிவந்து வகுப்பறையெங்கும் புதுமை செய்கிற அற்புத வித்தகராக விளங்கிய ஆசான் அவர்கள் பல மாணவர்களின் வாழ்வில் பல திருப்புமுனைகளுக்குக் காரணமாக போகிறார் என்பது எமக்கு அப்போது தெரியாது.
அவர் கை பிடித்து சொல்லித் தந்த எண் கணிதமும், நற்தமிழ் அறிவுமே எமை இன்றைய வாழ்வுக்கு கைதூக்கி விட்டுள்ளது என்பதனை இப்போது நாம் நன்றியுடன் அறிகிறோம்.
அறிவுத் தூண்டுகோல்களுக்கு அகரம் சொல்லித் தந்த சிகரமான மறைந்த வைத்தியலிங்கம் துரைச்சாமி ஒரு சிறந்த நல் ஆசிரியர். பொறுப்போடும் விருப்போடும் கற்பிப்பவர். அவர் ஆரோக்கியமான தமிழ் மாணவ சமுதாயத்தை உருவாக்க எப்போதும் விழிப்போடிருந்தவர். தலைமை ஆசிரியராக இருந்தனால் கற்பிக்கும் சக ஆசிரியர்களின் திறனிலும் நம்பிக்கை வைத்திருந்தவர்.
சென்ஜோன்ஸ் கல்லூரியில் நீண்டகாலம் கனிஷ்ட பிரிவின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய அவரது அயராத உழைப்பானது ஒவ்வொரு மாணவர் மீதும் வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. அவர் தனது மாணவரின் மீது அசையாத நம்பிக்கையை வைத்திருந்தார். இளம் மாணவர்களிடையே ஓர் இணைப்புப் பாலமாக சமூகத்திற்கு சிறந்த ஒரு வழி காட்டியாக மிளிர்ந்தவர்.
இளம்பராயத்தில் எமக்கு படி படி என பாடஞ்சொல்லும் ஆசான் தெய்வத்தினும் ஒரு படி மேல் தான். அவர் அறியாமை இருளகற்றும் அறிவுச்சூரியனாக விளங்கியவர். கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைப்பிடித்த பொழுதிலும், ஆசான் துரைச்சாமி மாஸ்டர் கருணை மிகுந்த உளம் படைத்தவர். கல்லூரியிலும் சமுதாயத்திலும் தேவையிலிருக்கும் எவருக்கும் அயராது உதவி செய்தவர்.
உங்களின் கரும்பலகை பாடம் தான் பலரின் வாழ்வை உயர்த்தியது. எண்ணமெலாம் மாணவர் நலனிலேயே நிமிடங்களை நகர்த்துகிற நல்லாசானாகிய உங்களை, இப்பெருவுலகில் ஏதோ ஒரு பரியோவான் மாணவனின் மனதில் நிச்சயம் எழுதப்பட்டுருக்கும் உங்களுக்கான நல்லாசிரியர் என்ற உயர்விருது.
மாணவர்களின் மனங்களைச் செம்மைப்படுத்துவதிலும், நமது சமூகத்தைக் கட்டமைப்பதிலும் தலைமை ஆசிரியரான உங்களின் பங்களிப்புக்கும், கடின உழைப்புக்கும் நாம் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.
அவரின் உயர்ந்த இலட்சியங்களை நிறைவேற்றுவது அவரது மாணவர்களாகிய நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா