செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் வாராஹி வழிபாடு

எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் வாராஹி வழிபாடு

1 minutes read

வாராஹி தேவியை ஆத்மார்த்தமாக வழிபட்டு வந்தால், இன்னல்களும் இருக்காது. எதிரிகளும் இருக்க மாட்டார்கள். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் பலமிழக்கச் செய்வாள் என்கின்றனர் சாக்த வழிபாடு செய்யும் பக்தர்கள். சப்தமாதர்களில் ஒருவராக திகழ்பவள் வாராஹி. லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியாகப் போற்றப்படுபவள் வாராஹி தேவி. பேராற்றல் கொண்டவள். கனிவுடன் கறார் குணமும் கொண்டு செயல்படுபவள். ஜகத் கல்யாண காரிண்ய என்பதற்கேற்ப உலக நன்மைக்காக அருளை வழங்குகிற வாராஹி, சப்த மாதர்களில் தலையானவள் என்கின்றனர். மகாகாளி, தாருகாசுரனுடன் போர் புரிந்த போது அவளுக்குத் துணை நின்றவள் வாராஹிதேவி. யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தியாகப் போற்றப்படுகிறாள். சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் வாராஹியே உதவி செய்தாள். உறுதுணையாக இருந்தாள். அசுரனையும் அசுரத்தனத்தையும் அழிக்க பேருதவி புரிந்தாள்.

சிங்கத்தை வாகனமாகக் கொண்டு மூவுலகங்களையும் ஆளுபவள் லலிதா பரமேஸ்வரி. இவளின் சேனைக்குத் தலைவி வாராஹி. படைகளின் தலைவி இவள். லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ இவள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்தாள். சங்கு, சக்கரம், கதை முதலான ஆயுதங்களை ஏந்திப் போரிட்டாள். அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால். உலகின் ஜீவாதாரமான பூமிதேவியை உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தியின் பெண் அம்சமான வாராஹியும் பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவளாகத் திகழ்கிறாள். திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, அவளே அங்கு வாராஹி வடிவம் தாங்கி வந்து சேர்ந்தாள் என தேவி மஹாத்மியத்தின் எட்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

வராஹ மூர்த்தியின் அம்சமே வாராஹி. நிகரற்ற அருளும் இணையற்ற ஆற்றலும் கொண்ட வாராஹியைப் பற்றியும் அவளின் பல்வேறு வடிவங்களை பற்றியும் மந்திர சாஸ்திர நூல்கள் பலவாறு விதமாகப் புகழ்கின்றன. வாராஹியை பஞ்சமி திதியில் வழிபடுவது, எண்ணற்ற பலன்களையும் வலிமையையும் கொடுக்கும் என்பது ஐதீகம். தந்திர ராஜ தந்த்ரம் எனும் நூல் இவளை லலிதையின் தந்தை என்றே குறிப்பிடுகிறது. பெண் தெய்வமாக இருப்பினும் காக்கும் திறத்தாலும் ஆற்றல் வளத்தாலும் ஆண் தெய்வமாகவே வாராஹியை வர்ணித்து புகழ்கிறது. இதே கருத்தை பாவனோபநிஷத், வாராஹி பித்ரு ரூபா என ஆமோதிக்கிறது.

இத்தேவியை பஞ்சமி தினத்தன்று வழிபடுதல் விசேஷம். “பஞ்சமி பஞ்சபூதேஸி” என லலிதா ஸஹஸ்ரநாமம் இவள் பெருமை பேசுகிறது. “பஞ்சமி பைரவி பாசாங்குசை” என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டரும் இந்த வாராஹியை போற்றுகின்றார். காட்டுப்பன்றியின் முகம், அழகிய பெண்ணின் உடல் என்ற தோற்றத்துடன் காட்சியளிப்பவள் இவள். எட்டு கைகளை தேவி கொண்டிருக்கிறாள். பஞ்சமி திதியில் வாராஹியை மனமுருக வழிபடுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி பிரார்த்தனை செய்யுங்கள். வளர்பிறை பஞ்சமி திதி தான் வாராஹி வழிபாட்டுக்கு உகந்த நாள் என்றாலும் தேய்பிறை பஞ்சமியிலும் தேவியை வழிபடலாம். பஞ்சமி திதியில் வாராஹியை வழிபடுவதால் வளமும் நலமும் கிடைப்பதுடுன், எதிர்ப்புகளையும் எதிரிகளையும் பலமிழக்கச் செய்வாள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More