செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள்

வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள்

1 minutes read

வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருக்கு எதிராக டெல்லி பொலிஸார் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது  மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உட்பட 7 வீராங்கனைகள்  இவ்வாறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர், ஒரு சிறுமியும் இவர்களில் அடங்கியுள்ளார். கடந்த ஜனவரியில் மல்யுத்த வீராங்கனைகள் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகிறார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைப்பதற்கு பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சு நியமித்தது. இக்குழுவின் அறிக்கை ஏப்ரல் 5 ஆம் திகதி இந்திய விளையாட்டுத்துறை அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், இந்த அறிக்கை விபரங்களை விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிடவில்லை.

டெல்லி பொலிஸ் நிலையத்தில், பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என வீராங்கனைகள் குற்றம் சுமத்திய வீராங்கனைகள் கடந்த 23 ஆம் திகதி முதல் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அத்துடன், பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு  பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளாதமைக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரிக்கப்பட்டபோது, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என டெல்லி பொலிஸ் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதியளித்தார்.

அதன்பின் சில மணித்தியாலங்களில், பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2 வழக்குகளை டெல்லி பொலிஸார் பதிவு செய்தனர்.

சிறுமி ஒருவரின் குற்றச்சாட்டு தொடர்பில் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு வழக்கும், ஏனைய வீராங்கனைகளின் முறைப்பாடுகள் தொடர்பாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி பிரதிப் பொலிஸ் ஆணையாளர் பிரனவ் தயாள் தெரிவித்துள்ளார்.

எனினும், டெல்லி பொலிஸார் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறும் வீராங்கனைகள், பிரிஜ் பூஷன் சரண் சிங் சிறையில் அடைக்கப்பட்டு, அவரின் பதவிகள் பறிக்கப்படும்வரை போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளனர்.

விளையாட்டு நட்சத்திரங்கள் ஆதரவு

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு இந்திய விளையாட்டுத்துறை பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா, கிரிக்கெட் நட்சத்திரங்களான கபில்தேவ், வீரேந்திர சேவக், இர்பான் பதான், ஹர்பஜன் சிங், குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஸரீன், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோரும் இவர்களில் அடங்குவர்.

இதேவேளை, இராஜினாமா செய்வதில் தனக்குப் பிரச்சினை இல்லை எனக் கூறும் பிரிஜ் பூஷன் சரண் சிங், அப்படிச் செய்தால் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாக அர்த்தமாகிவிடும் என்கிறார். நீதிமன்ற உத்தரவை தான் மதிப்பதாகவும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தயார் எனவும் அவர் கூறியுள்ளார். (சேது)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More