3
பிரிக்ஸ் (BRICS) புதிய சர்வதேச கூட்டமைப்பு :
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
( சோவியத் காலகட்ட மற்றோர் “வார்சோ” (Warsaw Pact) கூட்டணியை போன்று உருவாகி வருவதாக, பிரிக்ஸ் (BRICS) புதிய சர்வதேச கூட்டமைப்பை மேற்குலகும் – அமெரிக்காவும் அச்சத்துடன் உன்னிப்பாக பார்க்கின்றனர்)
உலகிலேயே அதிக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள நாடாக ரஷ்யா இருப்பினும்,
இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் நட்புடன் இருப்பதால் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை ரஷ்யாவை பெரிதும் பாதிப்படைய செய்யவில்லை என்பதே பொருளியலாளர்களின் கருத்தாகும்.
எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் இறையாண்மை விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது வழக்கம். நேரடியாக நாடுகள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை காட்டிலும், பொருளாதார தடைகள் விதிப்பது குறிப்பிட்ட அந்த நாட்டை தனிமைப்படுத்த உதவும் என்று சர்வதேச நாடுகள் பின்பற்றும் முறையாகும்.
ஆயினும் பொருளாதாரத் தடை ரஷ்யா மீது திணிக்கப்பட்டது மேற்குலக – அமெரிக்காவின் போர் நடவடிக்கையின் மறைமுக தந்திரோபோயமாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜப்பான், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் 10,608 தனி நபர்களுக்கு தடைகளை விதித்துள்ளன. மேலும் 3,431 நிறுவனங்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளன.
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு :
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், அமெரிக்காவின் நிர்பந்தத்தினாலும் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பல நாடுகள் எண்ணெய் அல்லது ஆயுத வர்த்தகத்தை காலவரையின்றி தடை செய்தன. மேலும் பல நாடுகள் ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளன.
ஆயினும் இத்தடைகளை தகர்த்து ரஷ்யாவும் அதன் சர்வதேச கூட்டமைப்பான “பிரிக்ஸ்” (BRICS) மேற்குலக -அமெரிக்க கூட்டமைப்புக்கு எதிராக சவாலாக எழுந்துள்ளது.
பிரிக்ஸ் (BRICS) என்பது 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும். பிரேசில், உருசியா, இந்தியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்க ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாகும்.
இந்த நாடுகளெல்லாம் வளரும் தொழில்மயமாகி வருகிற நாடுகளாகும். 2022ன் படி இந்த ஐந்து நாடுகளின் கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதியும், கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி யுஎஸ்$16.6 ட்ரில்லியனும், மற்றும் அந்நிய செலாவணி கூட்டு கையிருப்பு யுஎஸ்$4 ட்ரில்லியனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பதில், பிரிக்ஸ் உறுப்புநாடுகள் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்றுகின்றன. கோரானா பெருந்தொற்றின் பக்க விளைவுகள் தற்போது குறைந்துள்ளன. ஆனாலும், அதன் பாதிப்பை உலகளாவிய பொருளாதாரத்தில் இன்னும் காண முடிகிறது. தமது பரஸ்பர ஒத்துழைப்பால், கோரானா தொற்றுக்கு பிந்தைய உலகளாவிய பொருளாதார மீட்பு நடவடிக்கைக்கு பயனுள்ள பங்களிப்பை அளித்து வந்துள்ளனர்.
உலக பொருளாதார நிர்வகிப்பில்
பிரிக்ஸ் :
பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதியை கொண்டுள்ளன. இந்த நாடுகளில் மட்டும் சுமார் 360 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.
இந்த ஐந்து நாடுகளின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 16.6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்பதால் இந்த அமைப்பு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
2001இல் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ’நீல் – பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு வளர்ந்து வரும் பொருளாதாரங்களை உள்ளடக்கி ‘பிரிக்’ என்ற வார்த்தையை உருவாக்கினார். அவரின் கருத்துப்படி
அடுத்த 50 ஆண்டுகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா (பி.ர.இ.சி ) ஆகிய நான்கு பொருளாதாரங்கள் தனித்தனியாகவோ அல்லது ஒரு கூட்டமைப்பாகவோ மிகப் பெரிய பொருளாதார இடத்தை ஆக்கிரமிக்கும் என்ற கருத்தை முன்வைத்தார்.
அத்துடன் அடுத்த 10 வருடங்களில் உலகப் பொருளாதாரத்தில் இந்த நாடுகளின் வளர்ச்சியும் , அதிலும் குறிப்பாக சீனாவின் பொருளாதார வேகமும் அதிகரிக்க கூடும். இந்த நாடுகளில் கடைபிடிக்க்கப்படும் நிதிக் கொள்கை, பணக் கொள்கை, ஆகையவைகள் எவ்வாறு உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி தற்போதே முக்கியத்துவம் அடைகிறது.
இந்தியாவின் மனித ஆற்றல் :
ஜிம் ஓ’நீலின் ஆய்வறிக்கையில், இந்தியாவின் பங்கைப் பற்றி அவர் எழுதுகையில், “இந்த புது அணியில் சேர இந்தியா நிச்சயமாக ஆர்வமாக இருக்கும். மற்ற நாடுகளின் எந்தவொரு வற்புறுத்தல் களையும் அவர்கள் விரும்புவதில்லை , இதனால் மற்ற நாடுகளுக்கு அறிவுரை கொடுப்பதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும், இந்தியாவின் சந்தை அளவு, மக்கள் தொகை, மனித ஆற்றல் (குறிப்பாக புவியியல் இருப்பிடம்) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியாவைச் சேர்ப்பது கவர்ச்சிகரமானதாக இருக்கும்” என்று எடுத்துரைத்தார்.
2000ஆம் ஆண்டில் இந்த ஆய்வறிக்கை வெளியிட்டு பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா பல்வேறு சர்வதேச பொருளாதார கூட்டமைப்பில் ( குறிப்பாக G 20) வளர்ந்து வரும் பொருளாதார நாடாக தன்னை அடையாளப் படுத்தி கொள்கிறது.
உலக மக்கள்தொகையில் 42%, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23% , உலக வர்த்தகத்தில் சுமார் 17% பங்கைக் கொண்ட ஐந்து பொருளாதாரங்களை தற்போது பிரிக்ஸ் என்ற கட்டமைப்பிற்குள் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன.
ரஷ்யா – சீனா இணைவு :
2006ம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி 8-உச்சிமாநாட்டில், தனியொரு நிகழ்வாக ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. முதன் முதலில் இங்கு தான் நாட்டுத் தலைவர்கள் சந்தித்து பிரிக் என்ற அமைப்பு உருவாக்கம் செய்யப்பட்டது.
2006 ம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தின் போது, இந்த பிரிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டமும் நடைபெற்றது . இதில் தான் பிரிக் சர்வேதச கூட்டமைப்பின் நெறிமுறைகள் வகுக்கப்பட்டது. பிரிக் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு ஜூன் 16, 2009 அன்று ரஷ்யாவின் யெகாடெரின்பர்க்கில் நடைபெற்றது.
செப்டம்பர் 2010 இல் நியூயார்க்கில் நடந்த பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், தென்னாப்பிரிக்கா இந்த கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டது. அன்றிலிருந்து, இந்த கூட்டமைப்பு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவும், பிரிக்ஸ் உச்சி மாநாடும்:
இந்திய கண்ணோட்டத்தில், வளரும் நாடுகளின் அல்லது உலகளாவிய தெற்கத்திய நாடுகளின் குரலை பிரிக்ஸ் கூட்டமைப்பு வெளிப்படுத்திகிறது. உலக வர்த்தக அமைப்பில் தொடங்கி காலநிலை மாற்றம் வரையிலான பிரச்சினைகளில் வளர்ந்த நாடுகள் தங்களுக்குள் ஒரு குழுவாக இணைந்து குரலை உயர்த்தும் சூழ்நிலையில், வளரும் நாடுகளின் உரிமைகளை பிரிக்ஸ் போன்ற சர்வேதச கூட்டமைப்பு பாதுகாக்கும் என்று புது தில்லி நம்புகிறது. ஐந்து பிரிக்ஸ் நாடுகளும் ஜி -20 உறுப்பினர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒருபுறம் ரஷ்யா-சீனாவுக்கும், மறுபுறம் அமெரிக்காவுக்கும் இடையிலான சமநிலைப்படுத்தும் செயலை இந்தியா பராமரிக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் இந்தியா உலகளாவிய விவகாரங்களில் தனது பங்கைக் அதிகபடுத்திக் கொண்டிருந்தாலும், பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பிரேசிலின் அன்றைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ போன்ற தலைவர்கள் தேசியவாதத்தின் மூலம் தங்களது ஆளுமையை வெளிபடுத்தினர்.
டொலருக்கு மாற்றாக புதிய நாணயம்:
அதே வேளை பிரிக்ஸ் கூட்டமைப்பு பதிய நாணயத்தை வெளியிட உள்ளது.
பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு சார்பில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக, “புதிய சர்வதேச பணப்பரிமாற்ற நாணயத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இந்த நாணயத்தை வெளியிட உள்ளன.
அமெரிக்க டொலரின் தேவை குறையும்?
இக்கூட்டமைப்பின் மூலம் மாற்று பொருளாதார சக்தியாக மாற பல கட்ட பேச்சுவார்த்தைகள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் சரிவு, கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா- உக்ரைன் போருக்கு பிந்தைய காலத்திற்கு பிறகு சமீபத்தில் இக்கூட்டமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற கூட்டத்தில் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.
இதற்காக சர்வதேச நிதியம் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி சர்வதேச வர்த்தகப் பரிமாற்றம், பண பரிமாற்றத்தில்
புதிய நாணயம் நடைமுறைக்கு வரும்போது, அமெரிக்க டொலரின் தேவை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் தற்போதைய எதிர்பார்ப்பு:
மேற்குலக நாடுகள் உறுதியாகவும் – சாத்தியமாகவும், நம்பிக்கையாகவும் ரஷ்யாவை எதிர்ப்பதில் வெற்றி காண முனைகின்றனர். ஏனெனில், இந்த தலைவர்கள் தங்கள் முன்னோடிகளை விட ஒருமித்த கருத்துடன் தற்போது இணைந்து இருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில், ரஷ்யாவிற்கு எதிராக ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்கவும், ரஷ்யா தொடர்பான குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து கவனம் செலுத்தும் ஆலோசனைகளை கொண்டுவரவும் முன்னிலை வகித்தது வருகின்றனர்.
மேற்குலக – அமெரிக்காவின் மறைமுக போர் நடவடிக்கையின் தந்திரோபோயமாக பொருளாதாரத் தடை ரஷ்யா மீது திணிக்கப்பட்டு இருந்தாலும், பிரிக்ஸ் சர்வதேச கூட்டமைப்பு இன்னோர் “வார்சோ” (Warsaw Pact) கூட்டணியை போன்று உருவாகி வருவதாக அமெரிக்க இராணுவ ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா