சிட்னியின் சமூக சிந்தனையாளரும்,
தமிழ் பற்றாளருமான நவரத்தினவேல் !
———————————————————-
தமிழ் சமூகத்தினர் மத்தியில் அன்பிற்கும் , உயர் பண்பிற்கும் இலக்கணமாய் சிட்னியில் வாழ்ந்த ஓர் நல்ல சமூக சிந்தனையாளரை நம் அவுஸ்திரேலிய தமிழ் சமூகம் கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் நாள் இழந்துள்ளது.
உயர் பண்புடைமை காத்து, சமூகத்தினை பக்குவமாய் வழி நடத்திய நவரத்தினவேல் சங்கரப்பிள்ளை – Navaratnavel Sangarappillai (19-03-1945 – 09-03-2023) அவர்கள் இரக்கத்தின் இருப்பிடமாய் இருந்தவர்.
ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தவர்.
தாயக தேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் பல உதவிகளை புரிந்த புத்தூர்,இலங்கையை பிறப்பிடமாகவும் , சிட்னி ஆஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினவேல் சங்கரப்பிள்ளை அவர்கள் 9-3-2023 அன்று இன்னுயிர் ஈந்தார்.
அமைதியின் உருவமாகவும், அடக்கத்தின் இருப்பிடமாகவும் இருந்த மறைந்த நவரத்தினவேல் சங்கரப்பிள்ளை அவர்கள் பண்பின் பெருந்தகையாகவும் விளங்கியவர். சமூகத்தில் அனைவரையும் சமமாக மதித்து காணும் இடங்களிலும் எல்லாம் வணக்கம் சொல்லி நலம் விசாரிக்கும் சிறந்த மனிதர். சமூக அக்கறை கொண்டபொதுநலவாதியும் அவரே. தமிழ் மூத்தோர் சங்கங்கள் அத்தனையிலும் முன்னின்று உழைப்பவர். இன்முகத்துடன் பேசி பல காரியங்களை சாதிக்கும் திறமையுடன் சமூக சேவையாளர் ஆக வாழ்ந்து மறைந்த திரு நவரத்தினவேல் அவரது வாழ்வு போற்றுதற்கு உரியது.
அத்துடன் அவர் சிறந்த தமிழ் பற்றாளரும் சமூக சிந்தனையாளராக விளங்கிய நவரத்தினவேல், வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானரையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதற்கு ஒப்பாக வாழ்ந்தவர். அவரின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை, 26-03-2023 அன்று சிட்னியில் பெருந்திரள் மக்கள் அஞ்சலியுடன் நடைபெற்றது.
இளம் தமிழ் சந்ததியினரை ஊக்கப்படுத்தி, எப்பொழுது எங்கு கண்டாலும் சந்தோஷமாக சிரித்து கதைத்து பேசும் நவரத்தினவேல் சங்கரப்பிள்ளை அவர்களின் இழப்பு சிட்னி தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா