ஈராக்கில் இன்னோரு ‘மைலாய்’ படுகொலையே – ஃபலூஜா’ !!!
ஈராக்கில் பிணக் குவியல் மேல்நாட்டப்பட்ட ஜனநாயகம்!!!!
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(சரியாக இன்றைய நாளில், இருபது வருடங்களுக்கு முன்னர் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா ஏப்ரல் 28, 2003ல் ஃபலூஜாவின் ஒரு பள்ளிக்கூடத்தை இராணுவ முகாமாக மாற்ற முயன்றதில் இருந்து தொடங்கிய கோரமான போரே Battle of Fallujah ஆகும்)
2003இன் ஆரம்ப நாட்களில் ஈராக்கின் சதாம் அரசு பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அது மனித இனத்துக்கே ஆபத்து என்றும் அப்பட்டமான பொய்யை கூறிய அமெரிக்கா தனது புளுகு மூட்டைகளில் இருந்து பேரழிவு ஆயுதங்களை அவிழ்த்துவிட்டு ஈராக்கின் இடிபாடுகள், பிணக் குவியல்கள் மேல் ’ஜனநாயகத்தை’ நிலைநாட்டியது தான் மிச்சம் எனலாம். இதனையே இன்றைய ஈராக்கில் காணலாம்.
அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த ஃபலூஜா ( Battle of Fallujah )
அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஈராக் மக்களின் மிகப்பாரிய போராட்டமாக வெடித்துக் கிளம்பிய முதல் நகரம்தான் ஃபலூஜா. ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு மேற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்நகரம்.
ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா ஏப்ரல் 28, 2003ல் ஃபலூஜாவின் ஒரு பள்ளிக்கூடத்தை இராணுவ முகாமாக மாற்ற முயன்றது. இருநூறுக்கும் மேலான மக்கள் உடனடியாகக் கூடி இந்த முயற்சியை முறியடிக்கப் போராடினர். அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் தாறுமாறான துப்பாக்கி சூடு நடத்தி 17 பேரைக் கொலை செய்தது.
அடுத்த இரண்டாவது நாளில் இந்த படுகொலையைக் கண்டித்துப் போராடிய மக்கள் மீது மீண்டும் அமெரிக்க சிப்பாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் கொல்லப்பட்டனர்.
இச்செயல் பரந்துபட்ட ரீதியில் ஈராக்கிய மக்களின் கோபாவேசத்தை மூண்டெழச் செய்தது. ஃபலூஜா அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டத்தின் மையமானது.
எண்ணை வள ஆக்கிரமிப்பு:
ஈராக்கில் கால் பதிக்காமல் எண்ணை வளப் பிராந்தியத்தில் தன் ஆதிக்கத்தையும் தனது உலக மேலாதிக்கத் திட்டத்தையும்
நிறைவேற்றுவதை அமெரிக்காவால் முடியாது. நெடுந்தொலைவில் இருந்து குண்டு வீசினாலும் ஈராக்கின் எண்ணை வயல்களை இலகுவாக உறிஞ்சு கைப்பற்ற முடியாது.
இதனாலேயே பீதியுடன் கால் பதித்த அமெரிக்க பொம்மை அரசாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் மட்டுமல்லாமல் தான் அடைந்த அதே பீதியை மக்களுக்கு ஏற்படுத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளாலுமே ஊன்றிய காலை உறுதி செய்துகொள்ள முயற்சித்தது.
ஃபலூஜாவில் கொடூரமான போர்க் குற்றங்கள் பல செய்திருந்த ’ப்ளாக்வாட்டர் யூ.எஸ்.ஏ’ (BlackWater USA) என்ற தனியார் கூலிப்படையின் அணி வரிசையை மார்ச் 31, 2004 அன்று வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம் ஒன்று தடுத்து நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்கியது.
பாரிய அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்துக்கு எதிராக ஃபலூஜா மக்கள் நடத்திய போராட்டங்களும், அடைந்த வெற்றிகளும் நாடெங்கிலும் மக்களால் கொண்டாடப்பட்டது, உலகத்தார் கவனத்தை எல்லாம் ஃபலூஜா தம் பக்கம் ஈர்த்துக் குவித்தது. அதனால் அமெரிக்க ஆக்கிரமிப்பு கேள்விக் குறியாக்கப்பட்டது.
பெண்டகன் சுற்றி வளைத்த ஃபலூஜா:
பழிவாங்கும் முகமாக அமெரிக்க இராணுவத் தலைமையகம் பெண்டகன் நவம்பர், 2004-ல் ஃபலூஜா நகரினை சுற்றி வளைத்தது. உள்ளிருப்போர் அனைவரும் எதிரிகள் என்று அறிவிக்கப்பட்டனர். நகரம் படுபயங்கரமான ஆயுதங்கள் தரித்த ஈவிரக்கமற்ற ஏராளமான இராணுவத்தினரின் போர்க்களம் ஆக்கப்பட்டது. தப்பி ஓட முயன்ற மக்கள் குடும்பத்துடன் மீண்டும் அந்த கொலைக் களத்தில் பிடித்துத் தள்ளப்பட்டனர்.
பேரழிவு இரசாயன ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்காதான் வெள்ளைப் பாஸ்பரஸ் என்ற இரசாயனப் பொருளை மிகப் பெரும் அளவில் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தியது.
போர்க்களத்தை ஒளியூட்டவே வழக்கமாய் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனம் மரணத்தை விளைவிக்கும் பயங்கரமான இரணங்களை ஏற்படுத்தக் கூடியது.
கதவுகள், சன்னல்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மக்களின் உடைகள் என தன் வழிப்பட்ட தடைகள் அனைத்தையும் எரித்துக்கொண்டு முன்னேறி இறுதியில் மனிதத் தோலையும், உள்ளிருக்கும் எலும்பையும் தின்று செறிக்கும் அகோரப்பசி கொண்டது அந்த இரசாயனம்.
அமெரிக்காவின் வெள்ளைப் பாஸ்பரஸ் தாக்குதல் :
வெள்ளைப் பாஸ்பரஸ் தாக்குதலில் மக்கள் பதுங்கி இருக்கும் பாதுகாப்பான குடியிருப்புக் கட்டிடங்களின் உள்ளிருக்கும் பிராண வாயுவையும் உரிஞ்சி எடுத்துவிடும். பயங்கர தீமைததன்மை கொண்ட வெள்ளைப் பாஸ்பரஸ் இத் தாக்குதலில் ஏராளமாகப் பயன்படுத்தப்பட்டது. இத்தோடு நில்லாமல் சொல்லொணாத் துயரைத் தலைமுறை தலைமுறைக்கும் விளைவிக்கும் கதிர்வீச்சுத் தன்மைகொண்ட ஏராளமான குண்டுகள் இந்த நகரத்தின் மீதான குவிந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன என்றும் அஞ்சப்பட்டது.
அமெரிக்க இராணுவத்தால் உயிருடன் பிடித்துச் செல்லப்பட்ட மக்கள் 1300-1500 மக்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். இதையே வேறு சொற்களில், “ஆயுதப் போராளிகள்” 1400 பேர் கொல்லப்பட்டனர் என்ற தனது மேற்குலக ஊடகங்களின் அறிவிப்பின் மூலம் வெளிப்படுத்தியது அமெரிக்கா.
போர் வெறி கொண்ட இராணுவம் ஃபலூஜா மக்களைப் பழிவாங்கும் தனது நோக்கத்தை இந்த செயலின் மூலம் வெளிப்படுத்திக்கொண்டது. படுகாயமுற்றுப் பரிதாப நிலையில் இருந்த ஒரு ஈராக்கியரை அமெரிக்க சிப்பாய் ஒருவன் சுட்டுக் கொல்வதைப் NBC செய்தி படம் பிடித்திருந்தது.
தனது பாதுகாப்பு கருதி செய்யப்பட்டதே இந்த செயல் என அமெரிக்க இராணுவ விசாரணை பின்னாளில் அப்பட்டமான பொய்யை கூறியது.
ஃபலூஜா மக்களைப் பழிவாங்கிய படலம் :
பத்து நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் இந்நகரத்து மக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது. இத் தாக்குதலுக்கு முன்னதாக பல பத்தாயிரம் மக்கள், பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் நகரத்தை விட்டு வெளியேறினர். இந்த தாக்குதலுக்கு முந்திய ஃபலூஜாவின் மக்கள் தொகை 4 ¼ – 6 லட்சம். தற்போதைய சனத்தொகையோ வெறும் 2 ½ – 3 லட்சம் மட்டுமே இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இத் தாக்குதலில் நகரத்தின் கட்டிடங்கள் பாதிக்கு மேல் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஈராக்கின் பல பகுதிகளைப் போலவே ஃபலூஜாவும் இடிபாடுகளுக்கு இடையேதான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. தாக்குதல் முடிந்து பலஆண்டுகள் கடந்த பின்னும் இதுதான் நிலை.
ஃபலூஜாவில் தொடரும் நோய்:
ஃபலூஜாவின் புற்றுநோய் விகிதம் ஹிரோஷிமாவைக் காட்டிலும் படுமோசமாக உள்ளது. ”ஈராக்கிய நகரம் ஃபலூஜாவின் புற்றுநோய், சிசு மரணம் மற்றும் மகப்பேறில் பாலின விகிதாச்சாரம் 2005-2009” என்ற தலைப்பிலான சமீபத்திய ஆய்வு, ”ஃபலூஜா நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக இருக்கிறது என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் புற்றுநோய் நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதையும், தற்போது அங்கு காணப்படும் புற்றுநோயின் தன்மை அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்ட புற்றுநோயின் தன்மையுடன் ஒத்திருப்பதையும் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து தெரிவிக்கின்றனர்.
ஹிரோஷிமாவைக் காட்டிலும் படுமோசமான பாதிப்பு:
ஈராக்கின் அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவெய்த் ஆகியவற்றில் காணப்படுவதைப்போல இரத்தப் புற்றுநோய் [leukemia] பாதிப்பு 38 மடங்கும், சிசு மரணம் 12 மடங்கும், மார்பகப் புற்றுநோய் 10 மடங்கும் ஃபலூஜாவில் அதிகரித்து இருக்கிறது. பெரியவர்களிடையே பெரும் அளவில் மூளைப் புற்றுநோய்க் கட்டிகளும் [brain tumors] , சீழ்க் கொப்பளங்களும் [Lymphoma] காணப்படுவதாக ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
1050 ஆண் குழந்தைகளுக்கு 1000 பெண் குழந்தைகள் என்று இருந்த விகிதம் 2005-க்குப் பின் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிந்திய இந்த நான்கு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் பிறப்பு விகிதம் 860 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்று தலைகீழாகி இருக்கிறது. இந்த பாலின விகித மாறுபாடும் 1945-ன் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிந்திய ஹிரோஷிமாவை ஒத்திருக்கிறது.
அணுவுலை எரிபொருட் கழிவு என அறியப்படும் இந்த திறன் குறைந்த யுரேனியத்தை அமெரிக்க இராணுவம் கவசங்கள், பதுங்கு குழிகளைப் பிளக்கும் குண்டுகளிலும், தோட்டாக்களிலும் பயன்படுத்துகிறது. இதன் வெடிப்பின்போது 40 சதவீதத்துக்கும் மேலான யுரேனியம் மீசிறு அணுத்துகள்களாக வெளிப்படுகிறது. இது தாக்கப்பட்ட பகுதிவாழ் மக்களின் இரத்த ஓட்டத்தில் எளிதில் புகுந்து நிணநீர் சுரப்பிகளில் தங்கிவிடுகிறது. அது வயதுவந்தோரின் விந்தணுவிலும், கருமுட்டையிலும் உருவாகும் மரபணுக் குறியீடுகளை (DNA) தாக்கி அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பிறவிக் கோளாறுகளை உண்டுபண்ணுகிறது.
இத்தகைய பாதிப்பால் விகாரமான பிறப்புகள், சிசு மரணம், பிறவிக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்களின் எண்ணிக்கை ஃபலூஜாவில் செங்குத்தாய் உயர்ந்து நிற்பதை உறுதிப்படுத்தும் முறைப்படியான விஞ்ஞானபூர்வமான முதல் ஆய்வு இது.
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய சர்வதேச ஆய்வு ஏடு (IJERPH) வெளியிட்ட கொள்ளைநோய் பற்றிய ஆய்வும் அண்டை நாடுகளைக் காட்டிலும் படுமோசமான அளவில் மேற்சொன்ன பாதிப்புகள் ஃபலூஜாவில் நிலவுவதைக் கண்டறிந்து கூறியது.
கதிர்வீச்சு நோய் பரவல்:
பல ஈராக்கிய மற்றும் பிரிட்டிஷ் மருத்துவர்கள் இணைந்து கதிர்வீச்சு தொடர்பான நோய்களின் வெகுவான பரவல் பற்றிய ஒரு விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. சபைக்கு அக்டோபர், 2009ல் கீழ்க்கண்ட விவரங்களுடன் ஒரு அறிக்கை எழுதினர். தலை இன்றி முண்டமாகவும், இரு தலைகளுடனும், நெற்றியில் கண்ணுடனும், கைகால்கள் அற்ற முடமாகவும், இன்னபிறவாகவும் விகாரமாகப் பிறக்கும் ஏராளமான குழந்தைகளைக் காணச் சகியாது ஃபலூஜாவின் பெண்கள் பிள்ளைப் பேற்றை நினைத்து அரண்டு போயிருக்கிறார்கள். மேலும், சின்னஞ்சிறு குழந்தைகளும் கொடூரமான புற்று நோய்க்கும், இரத்தப் புற்று நோய்க்கும் ஆளாகி இருக்கிறார்கள் என
செப்டம்பர், 2009-ல் ஃபலூஜா பொது மருத்துவ மனையில் 170 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 24% குழந்தைகள் பிறந்த ஏழு நாட்களுக்குள் இறந்துவிட்டன. அவ்வாறு இறந்த குழந்தைகளில் 75% குழந்தைகள் மேற்சொன்ன விகாரத்துடன் பிறந்தவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஃபலூஜாவில் என்றும் காணாத அளவுக்குப் பிறவிக் கோளாறுகளுடன் பிரசவம் ஆவது மட்டுமல்ல, 2003-ம் ஆண்டுக்குப் பின்னால் குறைப் பிரசவங்கள் தாருமாறாக அதிகரித்து இருக்கின்றன. அதனினும் கொடுமை என்னவென்றால், உயிர்த்திருக்கும் குழந்தைகளில் கணிசமானவை படிப்படியான பாரதூரமான உடலுறுப்புக் குறைபாடுகளுக்கு ஆளாகிறன.
பாரிய போர்க் குற்றங்கள்:
ஃபலூஜாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நமது காலத்திய படுமோசமான போர்க் குற்றங்களில் ஒன்றாகும். இவ்வித நடவடிக்கை “அதிர்ச்சியூட்டும் எச்சரிகை” அல்லது “கூட்டுத் தண்டனை” என அழைகப்படுகிறது. இது சட்டப்படி ஒரு போர்க் குற்றமாகும். ஆயினும் உலகம் இன்னமும் மௌனித்தே உள்ளது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா