சுயநிர்ணயத்திற்காக போராடும் மேற்குபப்புவா: நியூசிலாந்து விமானி பணய விவகாரம்:
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
நியூசிலாந்து விமானியை பணயக் கைதியாக வைத்திருக்கும் மேற்கு பப்புவா இயக்கம், இந்தோனேசியா கைப்பற்றி ஆக்கிரமித்துள்ள தங்கள் பிராந்தியத்தின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் வரை அவர் தங்கள் பிடியிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார் என்று கூறியுள்ளது.
நியூசிலாந்து விமானி பணயம் :
2023 பெப்ரவரி 7இல் இந்தோனேசியாவில் மேற்கு பப்புவா போராளிகள், பிலிப் மெஹர்டென்ஸ் (Philip Mehrtens )என்ற நியூசிலாந்து விமானியை பணயக்கைதியாக பிடித்தனர். இந்தோனேசிய விமான நிறுவனமான சுசி ஏர் (Susi Air) பப்புவாவிற்கு உள்ளேயும் வெளியேயும் விமானங்களை இயக்குகிறது. இவ்விமானியும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார்.
நியூசிலாந்து விமானியை பணயக்கைதியாக பிடித்ததை மேற்கு ‘பப்புவா தேசிய விடுதலை இராணுவம்’
TPNPB பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் தங்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அனைத்து வெளிநாட்டினரையும் குறிவைப்பதாகக் கூறியுள்ளனர்.
பிப்ரவரி 15 ஆம் தேதி, விமானியின் புகைப்படங்களில் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதையும், பப்புவா இயக்கத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பாதுகாக்கப்படுவதையும் காட்டியது.
இந்தோனேசிய அரசால் பப்புவா பிராந்தியத்தின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் வரை அவர் பிடியிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார் என்று கூறியுள்ளனர்.
மேற்கு பப்புவா சுதந்திர இயக்கம்:
பப்புவா இயக்கம் (Free West Papua movement )என்பது மேற்கு நியூ கினியாவை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர இயக்கமாகும். தற்போது இந்தோனேசியாவால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தை பிரிக்க நீண்ட காலமாக கோருகிறது.
நீண்ட காலமாக தொடரும் போரில் மத்திய பப்புவா மாகாணங்களில் இந்தோனேசியாவின் இராணுவத்தால் 500,000 மேற்கு பப்புவான் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் கற்பழிக்கப்பட்டுள்ளனர், பலர் சித்திரவதை செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளனர்.
அங்கு தொடரும் இனவெறி பாகுபாட்டால் பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளது. ஆச்சரியப்படும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவின் நிலப்பரப்புகள்
கடல் மட்டத்தால் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்தாலும், பப்புவான்களும் பழங்குடியின ஆஸ்திரேலியர்களும் குறைந்தது 25,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கொருவர் தொடர்புள்ளதாக
தெரிகிறது.
மேற்கு பப்புவா (West Papua )ஆனது பப்புவா நியூ கினியாவில் (PNG) இருந்து வேறுபட்ட பிரதேசமாகும். பப்புவா இந்தோனேசியாவில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். மற்றும் பப்புவா தீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. ஆனால்
பப்புவா நியூ கினியா (PNG )கிழக்கில் உள்ளது. பப்புவா பெரும்பாலும் மேற்கு பப்புவா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், பப்புவாவைக் குறிப்பிடுவது பப்புவா நியூ கினியா எனப்படும் கிழக்குப் பகுதி உட்பட பப்புவா தீவைக் குறிப்பதாகும்.
இரண்டாம் உலகப் போரில் பப்புவா:
இரண்டாம் உலகப் போரின் போது, நெதர்லாந்தின் கிழக்கு இந்தியத் தீவுகள் Netherlands East Indies (பின்னர் இந்தோனேசியா) ஜப்பானியப் போர் முனையில் எண்ணெய் வழங்குவதற்காக அதிபர் சுகர்னோவால் வழிநடத்தப்பட்டது. பின்னர் 17 ஆகஸ்ட் 1945 இல் இந்தோனேசியா குடியரசாக சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
நெதர்லாந்தின் நியூ கினியா (மேற்கு நியூ கினியா, பின்னர் ஒரு நெதர்லாந்து கிழக்கிந்தியத் தீவுகளின் ஒரு பகுதி) மற்றும் ஆஸ்திரேலிய நிர்வாகப் பகுதிகளான பப்புவா மற்றும் பிரிட்டிஷ் நியூ கினியா ஆகியவை ஜப்பானிய கட்டுப்பாட்டை எதிர்த்தன. பசிபிக் போரின் போது அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியப் படைகளுடன் கூட்டாளிகளாக செயற்பட்டு இருந்தன.
சுயநிர்ணயத்திற்காக போராடும் மேற்கு பப்புவா:
இந்தோனேசியா மேற்கு பப்புவான் பிரதேசத்தை கைப்பற்றி 40 ஆண்டுகளுக்கும் மேலாகியும், பழங்குடி பப்புவான்கள் இன்னும் சுயநிர்ணயத்திற்காக போராடுகிறார்கள். இந்தோனேசியா 1969 இல் மேற்கு பப்புவாவை அதிகாரப்பூர்வமாக கையகப்படுத்தியது. சுதந்திரம் குறித்த போலி வாக்கெடுப்பில் உள்ளூர் மக்களில் ஒரு சிலரே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் பின் இந்தோனேசியா மேற்கு பப்புவாவை அதிகாரப்பூர்வமாக கையகப்படுத்தியது
ஆஸ்திரேலியாவின் வடக்கே நியூ கினியா தீவின் மேற்குப் பகுதி ஒரு காலத்தில் டச்சு காலனியாக இருந்தது. ஆனால் நெதர்லாந்து 1950 களில் திரும்பப் விலகத் தயாராகத் தொடங்கியதும், 1961 ஆம் ஆண்டில் மேற்கு பப்புவான்கள் சுதந்திரத்தைப் பற்றி விவாதிக்க ஒரு மாநாட்டை நடத்தினர். இதன்பின் மேற்கு பப்புவான் மக்கள் “உதய நட்சத்திரம்” (Morning Star) கொடியை தங்கள் சுதந்திரத்திற்காக உயர்த்தினர்.
ஆனால் புதிதாக சுதந்திரமடைந்த இந்தோனேசியா இந்த மாகாணத்தின் மீது தனது உரிமையை வலுக்கட்டாயமாக வலியுறுத்தத் தொடங்கியது. பின்னர் இந்தோனேசியா, மற்றும் பழங்குடி மக்களுக்கு இடையே பாரிய மோதல் வெடித்தது.
போலி வாக்கெடுப்பும் கைப்பற்றலும்:
1962 ஆம் ஆண்டில், இந்த பிராந்தியப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘நியூயார்க் ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் ஒப்பந்தம் ஒன்று வரையப்பட்டது. மேலும் மேற்கு பாப்புவான் ஆலோசனை அல்லது ஒப்புதல் இல்லாமல் இந்தோனேசியா மே 1963 முதல் மேற்கு பப்புவாவின் தற்காலிக நிர்வாகியாக தன்னை நியமித்தது. ஐ.நா.உடன்படிக்கையின் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், அனைத்து மேற்கு பப்புவான்களும் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் 1969 இல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டபோது, அது சுதந்திரமான மற்றும் நியாயமானதாக இருக்கவில்லை.
இந்தோனேசிய அரசின் இராணுவம் தாம் நியமித்த 1,026 தலைவர்களை ஒட்டுமொத்த மக்களின் சார்பாக வாக்களிக்கத் தேர்ந்தெடுத்தது. மேலும் அவர்கள் தவறான வழியில் வாக்களித்தால் அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியது. இந்தச் சூழலில், “சுதந்திர தேர்வுச் சட்டம்” “Act of Free Choice” என்றழைக்கப்படும் முடிவு ஒருமனதாக இருந்தது. மேற்கு பப்புவாவை இந்தோனேசியா கைப்பற்றியது ஐ.நா.வால் ரப்பர் முத்திரையிடப்பட்டது போல அமைந்தது.
ஏறக்குறைய அனைத்து பழங்குடி பப்புவான்களும் இந்த வாக்கெடுப்பை நிராகரித்தனர். இதை “தேர்வு இல்லாத செயல்” என்று அழைக்கின்றனர். மேலும் பலர் இன்றுவரை புதிய சுயநிர்ணயத்திற்கான உண்மையான வாக்கெடுப்பைக் கோருகின்றனர்.
சுயநிர்ணயத்திற்கான வாக்கெடுப்பு:
இந்த தவறான வாக்கெடுப்பு மேற்கு பப்புவான்களின் சுதந்திரத்திற்கான அழைப்புக்கு அடிப்படை முடக்கமாக அமைந்தது. பூர்வீக மேற்கு பாப்புவான்கள் இந்தோனேசிய இராணுவம் மற்றும் காவல்துறையினரால் தினசரி கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். மேலும் பலர் தொடர்ந்து அச்சத்தில் வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.
1963 முதல் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திரத்திற்காக கிளர்ச்சி செய்பவர்கள் வெளிப்படையாக அதிகளவில் சித்ரவதை செய்யப்படுகிறார்கள்.
அத்துடன் தங்கள் உதய நட்சத்திரக் கொடியை உயர்த்துவது சட்டவிரோதமானது என்றும் மாகாணத்தின் பல தலைவர்கள் அமைதியான செயல்களுக்காக நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
மேற்கு பாப்புவா பகுதியில் சுதந்திரத்திற்கான ஆயுதமேந்திய இயக்கம், இந்தோனேசிய பாதுகாப்புப் பணியாளர்களுடன் ஆயுத மோதல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அக்டோபர் 2011 இல், மூன்றாம் பாப்புவான் மக்கள் காங்கிரசு, சுய-ஆட்சி தொடர்பான பிரச்சினைகளை பற்றிய மாநாடு இந்தோனேசியப் படைகளால் வன்முறையில் முறியடிக்கப்பட்டது. அதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்தோனேசியா பிராந்திய ஒருமைப்பாடு :
இந்தோனேசியா அதன் “பிராந்திய ஒருமைப்பாட்டை” பாதுகாப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன் எனில்- மேற்கு பப்புவாவில் உள்ள மிகப்பெரிய துறைமுகமான ‘ஃப்ரீபோர்ட்’ மெக்மோரன் தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கம் நாட்டின் மிகப்பெரிய வரியும், இலாபம் ஈட்டும் ஒன்றாகும்.
ஆஸ்திரேலியாவின் அரசியல் கூட்டாளி இந்தோனேசியா?
மேற்கு பப்புவா ஒரு காலத்தில் டச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் ஒரு பகுதியாக இருந்ததால், அது இன்றைய சுதந்திரமான இந்தோனேசிய குடியரசின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று இந்தோனேசியா தனது பங்கிற்கு வாதிடுகிறது. முக்கியமாக இரண்டு பெரிய ஆஸ்திரேலிய அரசியல் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டில் அவர்களை ஆதரிக்கின்றன.
ஆஸ்திரேலியாவிற்கு இந்தோனேசியா ஒரு முக்கியமான அரசியல் கூட்டாளியாகக் கருதப்படுகிறது. மேலும் இரு தரப்பிலிருந்தும் அரசியல்வாதிகள் தங்கள் இந்தோனேசிய சகாக்களுடன் நட்பு போக்கைக் கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா இந்தோனேசிய ராணுவத்துடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறது. மேற்கு பப்புவான் சுதந்திர இயக்கத்தின் மீதான சமீபத்திய அடக்குமுறைகளில் ஈடுபட்டுள்ள அதன் பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ் பிரிவு, ‘டிடாச்மென்ட் 88’ க்கு இது பயிற்சி மற்றும் நிதியுதவியையும் வழங்குகிறது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு குறிப்பிடத்தக்க மேற்கு பப்புவான் சமூகம் மற்றும் மேற்கு பப்புவான் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் பெரிய வலையமைப்பைக் கொண்டுள்ளது. மேற்கு பப்புவான் சுதந்திர இயக்க ஆதரவான இந்த அமைப்பு இரு நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு இடையிலான சமரசம் பேண நீண்டகாலம் முயல்கிறது.
டிசம்பர் 1 பாப்புவான் சுதந்திர தினம் ;
மேற்கு பப்புவா சுதந்திர இயக்கம் மூன்று முக்கிய கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. ‘கோலியாத் தபுனி’ தலைமையிலான மேற்கு பப்புவா தேசிய விடுதலை இராணுவம் (West Papua National Liberation Army). இரண்டாவது மேற்கு பப்புவா புரட்சி இராணுவம் (West Papua Revolutionary Army) ‘மத்தியாஸ் வெண்டா’ தலைமையில் உள்ளது.
இத்துடன் மேற்கு பப்புவா தேசிய இராணுவம் (West Papua National Army) ‘பெர்னாண்டோ வோரோபே’ தலைமையிலும், ஆயுதமேந்திய பிரிவுகளின் மற்றய குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி தளபதி இல்லாமல் வரையறுக்கப்பட்ட பிராந்திய கட்டுப்பாட்டுடன் செயல்படுகின்றன.
வெளிநாட்டில் உள்ள தலைவர்களின் ஒரு மேற்கு பப்புவா குழு, சுதந்திரத்திற்கான சர்வதேச ஆதரவிற்காக பாடுபடும் அதே வேளையில் பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்துகிறது.
1963 ஆம் ஆண்டு இந்தோனேசிய நிர்வாகம் இங்கு தொடங்கும் வரை நெதர்லாந்து மற்றும் அதன் நியூ கினியா காலனியின் போருக்கு முந்தைய உறவு, பப்புவான் சிவில் மற்றும் பிற சேவைகளை மேம்படுத்தி இருந்தது. பின்னர் அவர்களின் பிரதேசங்கள் சுதந்திரத்திற்காக ஒன்றிணைவதற்கு முட்டுக்கட்டையாக ஆஸ்திரேலிய – அமெரிக்காவின் நலன்களுக்காக இரண்டு பிராந்தியங்களையும் தனித்தனியாக வைத்திருந்தன.
ஐக்கிய நாடுகளின் சாசனம் மற்றும் பொதுச் சபை தீர்மானம் 1514 (XV) இன் படி மேற்கு நியூ கினியா மக்கள் சுயநிர்ணய உரிமையை அனுமதிக்க வேண்டும் என்று கோருகிறது. இதனையே நெதர்லாந்தும் தொடர்ந்து வலியுறுத்துகிறது.
மேற்கு பப்புவா போராளிக் குழுக்கள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 அன்று மேற்கு பப்புவாவின் மார்னிங் ஸ்டார் கொடியை உயர்த்துகின்றன, அதை அவர்கள் “பாப்புவான் சுதந்திர தினம்” என்று அழைக்கிறார்கள். இதைச் செய்பவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்படலாம் என்றும், இந்தோனேசியாவில் ஏழு முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் இந்தோனேசிய காவல்துறை எச்சரித்துள்ளது.
தொடரும் சுயநிர்ணய போராட்டம் :
சுயநிர்ணயத்திற்காக போராடும் மேற்கு பப்புவா மக்கள் நீண்டகாலமாக இக்கொடுமைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தோனேசியா மேற்கு பப்புவான் பிரதேசத்தை கைப்பற்றி 40 ஆண்டுகளுக்கும் மேலாகியும், பழங்குடி பப்புவான்கள் இன்னுமும் தங்களின் சுயநிர்ணயத்திற்காக போராடுகிறார்கள்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா