– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(அகிலனின் முதலாவது ஆண்டு நினைவாக 1990இல் ஈழத்தில் வெளிவந்த “மரணம் வாழ்வின் முடிவல்ல” என்ற கவிதைத் தொகுப்பானது ஈழவாழ்வின் நிதர்சனத்தை மெய்ப்பிக்கும் கவிதைகளாகும் . ஈழத்தின் பன்முக ஆளுமைமிக்க இளம் கவிஞனான அகிலன் திருச்செல்வம் 1989 மே பத்தில் விதையாக்கப்பட்ட நாள் நினைவாக இக்கட்டுரை)
எண்பதுகளின் பிற்பகுதியில் எழுச்சிமிகு கவிதைகளை படைத்த ஈழத்தின் இளம் கவிஞர்களில் அகிலன் திருச்செல்வம் குறிப்பிடத்தக்கவர். அகிலன் திருச்செல்வம் கவிதைகள் போரின் வலியை சுமந்த வரிகளாய் பரிணமத்தன.
1989 மே பத்தாம் நாள் தனது பத்தொன்பது வயதினில் தியாகத்திருவாய் ஈழ மண்ணில் விதையாக்கப்பட்ட நாள் !
பல ஆளுமைகளின் திறமைசாலியான அகிலன் திருச்செல்வத்தின் கவிதைகள் அன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் தமிழரின்
போரின் வலியை சுமந்த வரிகளாய் வரலாற்றின் பக்கங்களில் மையங்கொள்கிறது.
சோகத்தின் பாதைகளே
தேசத்தின் வரைபடமாய்
பரிணமித்தண …..
குருதியின் குருத்துக்கள்
விழியோரத்து சுவடுகளாய்
உறைந்தன………..
தினமும் துயரத்தின்
சிறகுகளால் துடைக்கப்பட்ட
நாட்கள்
இறந்து கொண்டிருந்தன……
கொந்தளிக்கும் கடலின் நடுவே இலங்கைத் தீவு. போர்ப் புயலின் நடுவே ஈழம். சுழன்றடிக்கும் புயலிலும், அலையோடு அலை மோதுவது போல் துக்க உணர்ச்சியிலும் கோப உணர்ச்சி யிலும் போரிட எழுந்து நின்றனர் ஈழத்து கவிஞர்கள். அந்த இளைஞர்களின் அச்சமின்மைக்கும், தன்னம்பிக்கைக்கும் சான்றாக விளங்கும் கவிதைகளாக அகிலனின் வரிகள் சூளுரைக்கின்றன.
பிறந்து………
வாழ்ந்து…….
எழுதப் படாத நிகழ்வாய்
பேசப்படாத மொழியாய்
மௌனமாய்……..
இங்கு
இழப்பொன்று நிகழ்ந்தது…….
எதை இழந்தோம்
மண்ணை…..
மக்களை…
காற்றை…..
கடலலையை..,
மூச்சை……….
முழுவதையும் இழந்தோம்…..
தமிழ் வாலிபரை எதிர்கால அபாயமாக எண்ணி பேரினவாத ராணுவம் கொன்றொழித்த போதிலும், எதிரியின் பிணந் தின்னும் துப்பாக்கியைவிட வலிமை வாய்ந்ததாக எழுதுகோலை இயக்குகிறான் அகிலன்.
மக்களுக்காய் மரணிப்பதையிட்டு
நான் மகிழ்ச்சியடைகிறேன்…
அதனால் என் துப்பாக்கி பறிபோவதையிட்டே
நான்வ ருத்தமடைகிறேன்…,,
ஏனெனில் என் குழந்தைக்கு
அது மிகவும் அவசியம்…..
நாம் எதை இழக்கவில்லை
நாம் எதை இழக்கவில்லை….
அகிலனின் கவிதை என்பது மிகவும் நுணுக்கமான ஒரு பொறி, அதன் உருவ அமைப்பு எளிமையாகத் தோன்றியபோதிலும், பலரை அவன் கவிதைகளில் ஈர்த்துள்ளது என்பதே உண்மை .
அகிலனின் கவிதையின் அடிகள் ஒவ்வொன்றுமே வீரியம் மிக்கனவாய் அமைந்தன. சொல்லாட்சியும் படிமவார்ப்பும் அவன் கவிதையின் சக்திப் பயப்புக்கான மூலவளங்களாயின.
நம்மவர்கள் அகிம்சா வாதத்தில்
அரசமைப்பில் நம்பிக்கை
இழந்தனர்…….
மானுட விடுதலைக்கு
தோள் கொடுத்தது
புரட்சிப் பூக்கள்…..
துப்பாக்கிச் செடியில்
மாணவ பேரவை பூக்க…
காலமென்னும் காற்று
கைகொட்டி நின்றது……
சொல்லாட்சியையும், படிம வார்ப்பினையும் அகிலனின் வரிகளில் அவதானிக்கலாம். கவிதையின் கட்டமைப்புக்கு அமைவாக முன் அனுபவ வரலாற்று அறிவுத் தகவல்களையும் நாம் இங்கு காணலாம்.
அகிலனின் முதலாவது ஆண்டு நினைவாக ஈழத்தில் வெளிவந்த “மரணம் வாழ்வின் முடிவல்ல” என்ற கவிதைத் தொகுப்பானது எம் வாழ்வின் நிதர்சனத்தை மெய்ப்பிக்கும் கவிதைகளாகும் .
எண்பத்து மூன்றில்
திருநெல்வேலி மண்ணில்
சிதறின சதைகள்………
தீவு எங்கும்
ஓடின குருதி.….
தாலி இருந்து
தனயனை இழந்து
எம் தமிழ்ப் பெண்கள்
தன்னம்பிக்கை முதலாய்
தாய் நாடு அடைந்தனர்..,
மனம் கசியும் கண்ணீர்த்துளிகளே இவ்வரிகள். ஆனால் அதன் பின் எழுவது அபசுரமல்ல. “நமது தலைமுறை நிமிர்ந்து நிற்கட்டும்” என்று அறை கூவுகிறான் அந்தப் போராளிக் கவிஞனான அகிலன்.
தொடர்ந்து வரும்
சோகத்தின் பயணத்தில்
இறுதியில் இணைந்தது
இனிய வடமராட்சி…
மீன்கள் துள்ளும்
கடலலை ஓரம்………
பேய்கள் குவியும்!
பிணங்களை உருட்டும்……!
அவற்றை……..
தவறெனச் சொல்லும்!………
மன்னிப்பும் கேட்கும்!………
தேடுதல் வேட்டையின் பேரில்…
தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும்….
சோதனை என்னும் பெயரில்………
பெண்களை சுவைத்துப் பார்க்கும்…….
சோகம் நிறைந்த
பாடங்கள் முடிவில்
மக்கள் என்றும்
வரலாறு படைப்பாளர்
1990 இல் யாழ்ப்பாணத்தில்
வெளியிடப்பட்ட “மரணம் வாழ்வின் முடிவல்ல” கவிதை தொகுப்பில் அடங்கிய அனைத்தும் எரிதழல் கவிதைகளாகும். படிப்பவர் நெஞ்சில் உணர்ச்சிப் புயலை எழுப்புகின்றன. ஈழத்தமிழரின் மானுட வாழ்வை ஒத்தையாய் தனித்து நின்று பார்க்காமல், போராடும் மக்கள் மத்தியில் நின்று, அவர்களின் துக்கங்களில் பங்கேற்று, அவர்களின் உறுதியும் தளராத நம்பிக்கை தரும் கவிதைகளாக ஒவ்வொரு வரியிலும் ஒளிர்கிறது.
ஆகாயம் பிளக்கும் வரை
மானுடர்கள் எழுவர்………!
கொள்கையின் குன்றாய்
நிமிர்ந்து நிற்பர்……..!
துன்பத்தின் சுவடுகளால்
துடைக்கப்பட்ட
ஓராண்டின் முடிவில்
உறுதி எடுத்துக்கொள்வோம் …! நிமிர்ந்து நிற்கட்டும்
நமது தலைமுறை ….
அள்ளி எரியும் நெருப்புப் புத்துணர்களின் மீதான வருடல்களின் நெருடலை உணர்ச்சியூட்டுகின்றது “மரணம் வாழ்வின் முடிவல்ல” அகிலனின் கவிதைத் தொகுப்பாக மிளிர்கின்றது.
பூச்செடியில் புதிதாய்
பூக்கும் பூக்களுக்காக
சிறகடிக்கத் தொடங்கிவிட்ட
வஇளம் பறவைகளின் ஒலிக்காக
எனை எதிர் கொண்டுவரும்
மரணத்திற்காக நம்பிக்கை யோடு
நான் காத்திருக்கிறேன்.
உண்மையை
மறுப்பவர்களிடம் கூறுங்கள்
என் மரணம்
என்றுமே ஒரு முடிவல்ல”
அகிலன் திருச்செல்வம் கூறிய கவிதை வரிகளைப் போல அவரின் இளம் வாழ்வும் ஈழ மண்ணுக்காக ஆகுதியாக்கப்பட்டுவிட்டது. அகிலன் கூறியது போல அவன் மரணம் வாழ்வின் முடிவல்ல!!
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(ஈழத்தின் பன்முக ஆளுமைமிக்க இளம் கவிஞனான அகிலன் திருச்செல்வம் 1989 மே பத்தில்
ஈழ மண்ணில் விதையாக்கப்பட்ட நாள் நினைவாக இக்கட்டுரை)