காலம் ஈழத்தமிழர்களை வஞ்சித்து அவர்களின் தேசத்தை பறித்து ஆன்மாவை அலைக்களித்து அநாதைகளாக்கி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி ஆண்டுகள் கடந்தும் இன்றும் தனது இருப்புக்காய் போராடியே ஆகவேண்டிய காலக்கட்டாயத்தை தவிர்த்துவிடமுடியவில்லை.
ஒரு இனமாக ஈழத்தமிழர்களின் இழப்புகள் வார்த்தைகளால் வகைப்படுத்த முடியாது.
புண்பட்டு புதைக்கப்பட்டு அடையாளங்கள் அழித்தொழிக்கப்பட்ட இந்த இனத்தின் நம்பிக்கையாய் காலம் தந்த கடவுளையும் தொலைத்துவிட்டு இன்று வீதிச்சண்டையிடும் பரிதாப நிலையில் ஈழத்தமினம் இருந்தாலும் இன்றைக்கு ஒரு தசாப்தங்கள் முன்புவரை உலகமே வியந்த போரியல் பண்பாட்டு உச்சத்தை பெற்றிருந்தவர்கள் நாம்.
போரியல் மரபின் நீட்சி
அப்படியான ஒரு போரியல் மரபின் நீட்சியில் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் தமிழன் அடிபணிவதும் இல்லை, யாருக்கும் எப்போதும் மண்டியிடப்போவதும் இல்லை என்ற பேருண்மையை சிறிலங்கா அரசுக்கும் சர்வதேச நாடகதாரிகளுக்கும் தோலுரித்துக்காட்டிவிட்டு தங்களை தியாகித்தது தமிழர்சேனையும் அதன் போரியல் மரபும்.
ஆனந்தபுரம் ஈழத்தமிழர் ஆன்மாவில் வேரூன்றிப்போன மறந்து கடந்துவிடமுடியாத ஒரு சமர்களத்தின் கதை அது.
ஈழத்தமிழ் பிள்ளைகளிடத்தில் காலங்கலமாக கடத்தவேண்டிய மண்டியிடா ஈழத்தமிழர் மாண்பும் அவர்களைஅழித்து ஒழிக்க போரியல் ஒழுக்கத்தை மீறி அம்மணமாய் நின்ற ஒரு அரசின் கதை.
உலகமே சேர்ந்து ஒரு இனத்தை படுகொலை செய்த அத்தியாயமொன்றில் ஈழத்தமினத்திற்கு அநியாமிழைத்த இன்னுமொரு பாகம் தான் ஆனந்தபுரம் சமர்.
ஆனந்தபுரம் என்ற கிராமம்
2009 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆனந்தபுரம் என்ற கிராமத்தில் நிகழ்ந்த பெருவீரத்தின் போர்நிலக்காட்சிகள் கந்தகத்தையும் பொசுபரசுக்குண்டுகளையும் நிறைத்து நின்ற நாட்கள் அவை.
ஈழத்தமிழினம் தனது 30 ஆண்டுகால உரிமைப்போரை ஒரு கட்டத்தில் எல்லைக்குட்படுத்தி அடுத்தகட்டத்திற்கு கையகப்படுத்தவேண்டிய கால நிர்பந்தத்தை எதிர்நோக்கிக்கொண்டிருந்த நாட்களவை.
புலிவீரத்தின் பிரதாபங்கள் பேசப்பட்ட தளபதிகளும் ஈழத்தமினத்தின் ஒப்பற்ற காலக்கடவுளும் மண்ணையும் மக்களையும் மட்டுமே நேசித்த போராளிகளும் என யாவரும் ஒரு பெட்டிக்குள் முடக்கப்பட்டு முடிவுறுத்தியே ஆகுவோம் என்ற எதிரியின் முழுமூச்சான போர்விதி மீறல்களும் ஒன்றாகிப்பிரயோகிக்கப்பட்டுக கொண்டிருந்த நேரம் அது.
தொடர்ந்தும் எதிரிகளின் நிலைகளை அழித்து ஒழித்து பேரியிழப்புகளை ஏற்படுத்தியபோதும் படைப்பலம் மிகைப்படுத்தப்பட்டு பாரிய எண்ணிக்கையிலான இராணுவங்களை அந்த நிலமெங்கும் குவித்திருந்த்தது சிறிலங்கா அரசு.
ஓய்வு உறக்கம் இன்றி போர்
புலிகள் தரப்பிற்கு இதற்குமேலும் வளங்கல் செயற்பாடுகள் இருக்கக்கூடாது என்பதில் குறியாக இருந்த அரச பயங்கரவாதத்தின் பக்கமாக வல்லாதிக்க அரசுகள் கடற்தடுப்புச்சுவரை ஏற்படுத்தியிருந்த நிலையில் இனி எல்லாம் முடிந்துவிட்டது என்ற ஒரு கட்டத்திற்கு போராளிகளையும் தளபதிகளையும் சிந்திக்க வைக்க வைக்குமளவுக்கு நடந்துகொண்டிருந்தது அந்த நாட்கள்.
வளங்கல் யாவும் தடைப்படுத்தப்பட்ட நிலையில் வெறும் ஆட்பல வளத்துடன் ஓய்வு உறக்கம் இன்றி போரிட்டுக்கொண்டிருந்த போராளிகள் வன்னிப்பெருநிலப்பரப்பின் பெரும்பகுதியை விட்டு பின்வாங்கியிருந்தது.
ஆனாலும் ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து ஒரு புள்ளியிலிருந்து ஒரு மாற்றம் நிகழ்ந்து தாயக நிலத்தை மீண்டும் அடித்து பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் போராளிகளும் தளபதிகளும் ஏன் இடம்பெயர்ந்துகொண்டிருந்த மக்களும் கூட நம்பிக்கொண்டே இருந்தார்கள்.
இந்த நிலையில், ஆனந்தபுரம் பகுதியில் மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் ஒருபோர்க்களம் ஒன்றை தயார்படுத்தினார்கள் அதுவே ஒரு இறுதி முயற்சி என்ற நம்பிக்கையோடு.
உலகத்தமிழினத்தின் உயிர்
தலைவர் பிரபாகரன் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் இணைந்த தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை முன்னெடுத்து எதிரியை ஊடறுத்து உட் சென்று பல முனை தாக்குதலுக்கான திட்டமாக அது அமைந்திருந்தது.
புலிகளின் ஒட்டுமொத்தமான பலமும் அங்கு ஒன்றுதிரட்டப்பட்டு பேரளவிலான போராளிகள் ஒரு கட்டளையின் கீழ் தமது பல்முனைத்தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுகொண்டிருந்தார்கள்.
எப்படியாவது இந்த வியூகச்சதுரத்திலிருந்து உலகத்தமிழினத்தின் உயிருக்கு மேலான தமது உடல் பொருள் ஆவி ஆகியவற்றையும் அர்ப்பணித்த தலைவரை காப்பாற்றவேண்டும், தாயக நிலத்தின் தடங்களில் அந்த மன்னாதி மன்னனை ஆள வைத்து வாழ வேண்டும் என்ற ஒற்றை ஓர்மத்தோடு போராட தயாரானார்கள்.
அதன்படியான தாக்குதல் மிகப்பெரும் இழப்புகளை அரச படைகளுக்கு ஏற்படுத்தப்பட்டு தலைவரை அந்த வியூகவலைக்குள் இருந்து வெளியேற்றி ஒரு அதிரடியான தாக்குதலை முன்னெடுத்தார்கள் விடுதலைப்புகள்.
போரியல் நாயகர்கள்
இதன்போது நம் ஒவ்வொருவருக்குமான தாயக கனவுடன் சாவினைத்தளுவ தயாரான பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின்முக்கிய தளபதிகளா.
மேற்குறித்த 7 பிறிகேடியர்கள் ,19 கேணல்கள் , 111 லெப் கேணல்கள், 252 மேஜர்கள் உட்பட 689 போராளிகள் நெஞ்சுரத்தோடு போராடு தமது இறுதி மூச்சை தாயக நினைவோடு கலந்து போயினர்.
நம் கண்ணீரில் இன்றும் துளிர்த்துக்கொண்டிருக்கும் தேசத்திற்காக இதேபோன்ற அந்த நாட்ககளில் தமிழ்இனத்தின் ஒப்பற்ற போரியல் நாயகர்களான அந்த தளபதிகள் புலிகளின் கோரத்தாக்குதல்களை முறியடிக்க வக்கற்று மனித குலத்திற்கு ஒவ்வாத வெண்பொசுபரசுக்குண்டுகளையும் கந்தக குண்டுகளையும் ஆனந்தபுரம் மண்ணின் மீது வீசியெறிந்தார்கள்.
சுவீத்துளைகளை முழுவதுமாக நச்சுக்கொண்டுகளின் புகைகள் நிறைத்துவிட்ட போதும் தேசத்தலைவனை காத்துவிட்டோம் என்ற இறுதி இலக்கின் மீதான ஆத்ம திருப்தியோடு அடங்கிப்போனார்கள். சொல்லப்போனால் ஈழத்தமிழினம் சந்தித்தேஇருக்கக்கூடாத ஒரு நாள் அது.
தமிழர் வீரத்தின் அத்தியாயம்
அடிமையின் அடிமைக்கும் அடிமையாய் இருந்த நம்மில் நாம் யாருக்கும் அடிமை இல்லை என்று புதிய பரணிபாடிய தமிழர் தேசிய இராணுவத்தை கட்டமைத்து வளர்த்து உலகமே வியந்து பொறாமைகொண்டு அழித்தொழிக்கவேண்டும் என்று நினைக்குமளவுக்கு ஒப்பற்ற ஒரு போர்ப்படையை தலைவரின் கனவிற்கு செயற்பட்ட கரங்களான எங்கள் தளபதிகள் தங்களை இறுதியில் எங்களுக்காக அர்ப்பணித்து தாயக மண்ணின் காற்றில் காவியமாகிப்போனார்கள்.
காலம் நிகழ்த்திய ஓரவஞ்சனைப்போரில் இந்த உலகில் எந்த ஒருஅரசும் கொண்டிராத காவியப்புதல்வர்களை பிரசவித்த நம் ஈழத்தாய் நஞ்சுப்புகை மயக்கத்தில் கிடந்த புதல்வர்களை அணைத்துக்கொண்டாள்.
ஆனந்த புரம் ஈழத்தமிழரின் போராட்டத்தில் ஒரு தோல்வியின் அடையாளம் அல்ல அது மண்டியிடாத தமிழர் வீரத்தின் அத்தியாயம், எமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டிய ஒரு ஓர்மத்தின் கதை.
ஆனந்த புரம் ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றில் ஒரு பேர் அத்தியாயம்.
நன்றி – ஐபிசி தமிழ்