செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கொரோனாவைவிடவும் கொடூரமாக உருமாறும் கூட்டமைப்பு: சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்

கொரோனாவைவிடவும் கொடூரமாக உருமாறும் கூட்டமைப்பு: சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்

3 minutes read

கொரோனாவைிடவும் கொடூரமாக உருமாறி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் இனவழிப்புக்கான நீதிக்கான பயணத்திலும் பெரும் கிருமித் தொற்றதாக பாதிப்பை ஏற்படுத்துவதாக அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அவதானிப்பு மையம் வெளியட்டுள்ள விரிவான அறிக்கை பின்வருமாறு:

உருமாறும் கூட்டமைப்பு

“உலகம் கொரோனா என்ற கிருமித் தொற்றினால் அல்லாடி வருகின்றது. அதிலும் கொரோனா என்பது தொடர்ச்சியாக ஒரு நிலையில் இல்லாமல் உருமாற்றம் அடைவதன் வாயிலாக உலக மக்களையும் சுகாதாரத்துறையினரையும் அலைக்கழித்து வருகின்றது. அதேபோலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரு உருமாறும் கொரோனாவாக பல்வேறு நிலைகளை எடுத்து வருகின்றது. இது தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தையும் இனவழிப்புக்கான நீதியை பெறுகின்ற பயணத்தையும் கடுமையாக பாதிக்கின்றது.

கூட்டமைப்பே உருமாறிய கொரோனா என்றால் அதற்குள் உள்ள சம்பந்தன், சுமந்திரன், சிறீதரன் போன்றவர்கள் விதவிதமாக உருமாறிய கொரோனா வகைகளாக உள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தமிழ் மக்களின் போராட்டத்தை கண்ணுக்குத் தெரியாத வகையில் அழித்து வருகின்றனர். அந்த வகையில் உருமாறும் கொரோனாவையும் கூட்டமைப்பு மிஞ்சி வருகின்றது என்பதே அரசியல் துயரமாகும்.

எதற்காக இந்த உருமாற்றங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 48ஆவது கூட்டத் தொடர் நாளை 13ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இதில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர் வாய்மொழிமூல அறிக்கை ஒன்றை வாசிக்கவுள்ளார். இதனை முன்னிட்டு சர்வதேச நாடுகளுடன் நெருங்கியுள்ள ஸ்ரீலங்கா அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் கள்ள உறவு மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் இனவழிப்புக்கான நீதியை வலியுறுத்துகின்ற குரல்களையும் வலுவிழக்கச் செய்யும் வகையிலான அரசியல் நகர்வுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாயிலாக ஸ்ரீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு அங்கமாகவே அண்மையில் சுமந்திரனுக்கும் அமைச்சர் பீரீஸிற்கும் இடையில் சந்திப்பு நடந்தது.

கூட்டமைப்பின் அரச ஆதரவுக் கடிதங்கள்

இந்த நிலையில் இலங்கை அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்று கூறி கடிதம் ஒன்று ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அண்மையில் கூறியிருந்தார். அதன் வாயிலாக இனப்படுகொலை குறித்த அவதானத்தை ஐ.நா அவையில் வலுவிழக்கச் செய்து ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவு தேடப்படுகின்றது.

குறித்த கடிதத்தை சுமந்திரனே தமக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியதாகவும் சிறீதரன் கூறியிருந்தார். மீண்டும் கடந்த 10ஆம் திகதி ஊடக சந்திப்பு வாயிலாக சிறீதரன் இதனை அடித்துச் சத்தியம் செய்த அதே நேரத்தில், யாழில் சுமந்திரன் ஒரு ஊடக சந்திப்பை நடாத்தி, விடுதலைப் புலிகள் போர்க்குற்றம் செய்தார்கள் என்றும் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் கோரி சம்பந்தன் கடிததத்தை அனுப்பவில்லை என்று சத்தியம் செய்கின்ற வேடிக்கை நிகழ்வும் இடம்பெற்றது.

அத்துடன் விரைவில் சம்பந்தன் எழுதிய கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பி உண்மை நிலை அம்பலம் செய்யப்படும் என்றும் யாழில் சுமந்திரன் கூறியிருந்தார். அதற்கு ஏன் காலம் எடுத்துக்கொள்ள வேண்டும்? புதிய கடிதத்தை தயாரிக்க சுமந்திரன் அவகாசம் கோருகிறாரா? சிறீதரன் – சுமந்திரன் மாறுபட்ட கருத்துக்கள், கூட்டமைப்பினால் ஐ.நாவுக்கு ஸ்ரீலங்கா அரசு ஆதரவுக் கடிதம் அனுப்பட்டது என்பதையே காட்டுகிறது.

எப்படியான கடிதம் அனுப்பியிருக்க வேண்டும்

ஈழத் தமிழினம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலைக்கு முகம் கொடுத்துள்ளது. அந்த சமூகத்தை சார்ந்து தேர்வு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு சர்வதேச விசாரணை தேவை என்றும் வலியுறுத்தி ஒரே குரலில் கடிதம் ஒன்றை வரைந்திருக்க வேண்டியதே காலத் தேவையாகும்.

அதனையும் இப்போதுதான் மேற்கொள்ளுவதா? நாளை ஐ.நா அமர்வு நடக்கும் சூழலில் இன்று கடிதம் அனுப்பினோம் என்றும் அனுப்பவில்லை என்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சண்டை பிடிப்பது ஏன்? அந்த கடிதத்தை பல மாதங்களுக்கு முன்னரே அனுப்புவதன் வாயிலாகவே ஐ.நா ஆணையாளர் தனது வாய்மொழி மூல அறிக்கையில் அதனை பிரதிபலிக்க முடியும் என்பது தமிழ் எம்பிக்களுக்கு ஏன் புரியவில்லையா?

திசை திருப்புகிறதா கூட்டமைப்பு?

ஐக்கிய நாடுகள் சபைக்கு உரிய காலத்தில் உரிய நேரத்தில் உரிய வகையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை தெரியப்படுத்தாமல், தமது மோதல்கள் மற்றும் குழப்பங்கள் வாயிலாக தமிழ் மக்களின் கவனத்தை திசை திருப்புவதன் வாயிலாக ஸ்ரீலங்கா அரசுக்கு கூட்டமைப்பு ஆதரவை ஏற்படுத்துகின்ற நிகழ்வே தற்போது இடம்பெறுகின்றது. இதுவே கூட்டமைப்பின் வெளிப்படையான உருமாற்றக் காட்சியின் பின்னணி அரசியல் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

கடந்த காலத்தில் கால அவகாசம் வாயிலாக இனப்படுகொலையாளிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் ஐ.நா சபையில் ஆதரவை பெற்றுக் கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை வேறு விதமாக ஆதரவைப் பெற்றுக் கொடுத்து, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் நீதிக்கான பயணத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பதே உண்மை நிலவரமாகும். இன்றைய கதிகாமர் என்று சிங்கள அரசு காதல் செய்கின்ற இன்றைய அன்ரன் பாலசிங்கம் என்று சிறீதரன் காதல் செய்கின்ற சுமந்திரன் – சிறீதரன் உருமாற்ற வகையறாக்கள் மக்களை திசைதிருப்பி பேட்டை அரசியல் செய்கின்றனர்.

இனப்படுகொலைக்கு நீதியே இல்லையா?

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியில் மிகவும் செல்திறன் மிக்க வகையில் போராட்டங்களை முன்னெடுப்பதும் அறிவுசார் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதும்தான் இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தர உதவும் என்பதை ஈழத் தமிழ் மக்களும் உலகத் தமிழ் கமூசமும் இனியாவது உணர்ந்து விரைந்து பயணிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் தேர்தலில் பெருத்த அடியினை வாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தமிழினத் துரோகத்தை கைவிடாத நிலையில், எதிர்வரும் காலத்தில் கூட்டமைப்பு என்ற கொரோனா கிருமியை முற்றாக அழித்து புதிய தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதன் வாயிலாகவும் இனப்படுகொலைக்கான நீதிக்காக உழைக்கும் வலுவான தமிழ் தலைமை ஒன்றை தாயகத்தில் ஏற்படுத்த முடியும் என்பதையும் உரைக்கின்றோம்.

இன்றைய சூழலில் ஈழ விடுதலை அமைப்புக்களும் நிலத்தில் இருந்து உரிமைக்காக சளைக்காது குரல் கொடுக்கின்ற அமைப்புகளும் இளைய தரப்பினரும் புலம்பெயர் தேச அமைப்புக்களும் மனித உரிமைச் செயற்பாட்டு அமைப்புக்களும் விரைந்து குரல் கொடுத்து செயல்திறன் மிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் வலியுறுத்துகிறது…” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: உரிமை மின்னிதழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More