அந்நாட்டில் திரவ மருந்துகள் அனைத்துக்கும் தேசிய அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சுமார் 100 சிறுவர்களின் இறப்பில் சிரப் மருந்து தொடர்புபட்டிருக்கும் அச்சம் காரணமாக இத் தடை விதிக்கப்பட்டுள்ளது
காம்பியாவில் சுமார் 70 சிறுவர்களின் மரணத்தில் இருமல் சிரப் மருந்து தொடர்புபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சில வாரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சில சிரப் திரவ மருந்துகளில் சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மூலப்பொருட்கள் இருப்பதாகவும் இதனுடன் தொடர்புபட்டு இந்த ஆண்டில் 99 சிறுவர்களின் உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாகவும் இந்தோனேசியா குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த சிரப் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவையா என்பது உறுதி செய்யப்படவில்லை.
சிறுவர்களிடையே சுமார் 200 சிறுநீரகப் பாதிப்பு சம்பவங்கள் பதிவானதாகவும் அதில் கிட்டத்தட்ட பாதி அளவான 99 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் இந்தோனேசிய சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
காம்பியாவில் 70 சிறுவர்களின் மரணத்துடன் தொடர்புபட்ட நான்கு இருமல் சிரப் மருந்துகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இந்த மாத ஆரம்பத்தில் சர்வதேச எச்சரிக்கை ஒன்றை விடுத்தது.
இதில் பயன்படுத்தப்பட்ட இருமல் மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.