இந்தோனேசியா – பாலித் தீவுக்கு அருகே படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 39 வயதுடைய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த படகு, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 11 சுற்றுப்பயணிகள் உட்பட 13 பேருடன் நுசா பெனிடா தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முதலில் ஒரு பெரிய அலை அடித்ததில் அவுஸ்திரேலியாப் பெண் படகிலிருந்து தூக்கி எறியப்பட்டார் என்றும் பின்னர் மீண்டும் ஓர் அலை அடித்ததில் படகு கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடலில் விழுந்த சுற்றுப்பயணிகள், கவிழ்ந்த படகை அண்மித்து பயணித்த பிறிதொரு படகில் வந்தவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலத்தை, பாலி கடற்படையினர் மீட்டுள்ளனர்.
உயிர் பிழைத்தோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.