பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பாதுகாப்புப் படையினர் நள்ளிரவில் நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தினர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பாபல்பூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்த துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நடவடிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுதும் கவனித்து வந்ததாக உள்ளூர்த் தகவல்கள் குறிப்பிட்டன.
இதேவேளை, பாகிஸ்தான் நடத்திய பீரங்கித் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்தது.
அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய இராணுவம் மீண்டும் எச்சரித்துள்ளது.