இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பல விமானச் சேவைகள் இரத்து செய்யப்படுகின்றன.
நேற்று நள்ளிரைவு இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டிருக்கிறது. பல விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தியா அனுப்பிய 2 விமானங்களையும் ஓர் ஆளில்லா ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தியிருப்பதாகப் பாகிஸ்தானின் தற்காப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Air India, IndiGo, Korean Air, Thai Airways, Lufthansa, Air France, EVA Air, China Airlines மற்றும் Qatar Airways ஆகியவை பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்க்கின்றன.
அத்துடன், மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் மாற்று வான்வெளிப் பாதையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கான இருவழிப் பயணங்களை இரத்து செய்துள்ளது.
அமிர்தசரஸ் விமான நிலையம், இன்றிலிருந்து நாளை மறுநாள் வரை மூடப்பட்டுள்ளது. நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வான்வெளியும் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் தங்களது இரு நீண்டதூர விமானச் சேவைகளை வேறு பாதைக்குத் திருப்பி விட நேர்ந்ததாக மலேசியா ஏர்லைன்ஸ் கூறியது.
இலண்டன் மற்றும் பாரிஸ் ஆகியவற்றுக்கான அச்சேவைகள் எரிவாயு நிரப்புவதற்காக கத்தாரின் டோஹாவுக்குத் திருப்பி விடப்பட்டன. பின்னர் அவை பயணத்தைத் தொடர்ந்தன.
அதேவேளை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் Scoot விமானச் சேவைகள் பாகிஸ்தானிய வான்வெளிப் பாதையைத் தவிர்க்கின்றன. அவை மாற்று வழிகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் பயண நேரம் சற்று அதிகரிக்கலாம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பேச்சாளர் CNAயிடம் கூறினார்.