பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொழிலதிபர் ஒருவரின் மகளை குழுவொன்று கடத்த முற்பட்ட வேளை, இளைஞன் ஒருவர் விரைந்து செயற்பட்டு, அக்கடத்தலை முறியடித்துள்ளார். இது குறித்த வீடியே, சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் (13) பட்டப் பகலில் முகமூடி அணிந்த வந்த மூவர், வீதியில் வைத்து தொழிலதிபரின் மகள் மற்றும் மருமகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பெண்ணை கடத்த முயற்சித்தனர். அருகில் வெள்ளை வேன் ஒன்றும் இதற்காக காத்திருந்தது.
இப்போது, ஓர் இளைஞன் கைகளில் தீயணைப்புக் கருவியுடன் ஓடிவந்து முகமூடி அணிந்திருந்தவர்களை தாக்க ஆரம்பித்தார். இதனையடுத்து அந்த முகமூடி அணிந்த மூவரும் வேனில் ஏறித் தப்பிச்சென்றுவிட்டனர்.
குறித்த வேனை நோக்கியும் காப்பாற்ற வந்த இளைஞன் தீயணைப்புக் கருவியை வீசியுள்ளார்.
அப்பகுதில் சைக்கிள் கடை வைத்திருக்கும் நபில் (Nabil) என்ற குறித்த இளைஞன், தான் காப்பாற்றிய தம்பதியைத் தமக்குத் தெரியும் என்று Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பதற்றத்தில் தீயணைப்புக் கருவியை எடுத்ததாகவும் அதைக் கொண்டு எப்படியாவது தாக்குதல் மற்றும் கடத்தலை நிறுத்த வேண்டும் என்று தான் நினைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞன் நபிலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.