பெண்கள் சமூகத்தின் வாழ்க்கை பல நாடுகளில் சிறப்பாக இன்று இருந்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் சமூகம் தாலிபான்களினால் சாபங்களாக நோக்கப்படுகின்றனர்.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தனியார் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான் அரசு தடை விதித்தது.
பல்கலைக்கழகங்களில் பாலினக் கலப்பைத் தடுக்க இந்த தடை அவசியம் என்று தலிபான் அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சர் நிடா முகமது நாதிம் வாதிட்டார். மேலும் சில பாடங்கள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, அவை சரிசெய்யப்பட்டவுடன் பல்கலைக்கழகங்கள் பெண்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். மூத்த ஐ.நா. அதிகாரிகள் இந்த மாதம் இரண்டு முறை ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது, பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தும்படி வலியுறுத்தினர்.
எனவே, தலிபான்கள் எந்த நேரத்திலும் தங்கள் உத்தரவை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் தலிபான் அரசு பெண்களுக்கு எதிரான தடையை மேலும் வலுப்படுத்தியது. அதாவது, பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைவுத் தேர்வு எழுத முடியாது என அதிரடியாக கூறி உள்ளது.
பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாவுல்லா ஹஷ்மி இன்று கூறியிருக்கிறார். இளங்கலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் பங்கேற்க முடியாது.
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் இந்த உத்தரவை மீறினால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் சில மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக இருந்தது. பிற இடங்களில் பிப்ரவரி 27-ல் தொடங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், அரசின் உத்தரவால் கலக்கமடைந்துள்ளன.