செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜ.நாவை இலங்கை அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளும்?

ஜ.நாவை இலங்கை அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளும்?

5 minutes read

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை காரணமாகவும் covid-19 இன் கெடுதியான விளைவுகள் காரணமாகவும் பொருளாதார ரீதியாக நாடு பெரும் நெருக்கடிக்குள் செல்கின்றதா?

கொழும்பில் அமெரிக்க டொலர்களை பெறுவது கடினமாய் உள்ளது என்று கூறப்படுகிறது. நாட்டின் நாணயப் பெறுமதி சரிந்து கொண்டு போவதும் அதற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.நாட்டின் பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் பால்மாவை காணமுடியவில்லை. எல்லா பல்பொருள் அங்காடி களிலும் பால்மா வைக்கப்படும் இடம் வெறுமையாகக் கிடக்கிறது. சமையல் எரிவாயுவும் கிடைப்பதில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள சமையல் எரிவாயு முகவரின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை வேளையில் இருபது சிலிண்டர்கள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது.தென்னிலங்கையில் கிராமப்புறங்களில் கொட்டைப் பாக்குக்கும் தட்டுப்பாடு வந்துவிட்டது. ஒரு கொட்டைப் பாக்கு ஆகக்கூடியது 13 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

பொருட்களின் விலைகள் மெல்ல மெல்ல உயர்ந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் சவரம் செய்ய பயன்படுத்தும் ஷேவிங் றேசர்களின் விலை சில ரூபாய்களாக கூடியிருக்கிறது. எப்படியென்று கேட்டபோது ஒரு கடைக்காரர் சொன்னார்….”முன்னறிவித்தல் இன்றி பல பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன.ஒரு பொருளுக்கு சில சமயம் மூன்று விலைகள் உண்டு” என்று.

ஒருபுறம் கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்னொருபுறம் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு கேட்டு போராடி வருகின்றன. இவை தவிர விவசாயிகளுக்கு உரமில்லை. கடந்த மாதம் மட்டும் சுமார் 120 போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இப்போராட்டங்களில் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட 1500 பேர் கூடுவதாகவும் அதுவும் வைரஸ் தொற்றுக்கு ஒரு காரணம் என்றும் அவர் சில தினங்களுக்கு முன் கூறியுள்ளார். டெல்டா திரிபு வைரஸ் தாக்கத்தால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பான செய்திகள் அதிகம் தணிக்கை செய்யப்படுவதாக ஜனங்கள் நம்புகிறார்கள். வைரஸ் தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைத்துக் கூறப்படுவதாகவும் வதந்திகள் உண்டு.

இவ்வாறாக அரசாங்கம் ஒரே சமயத்தில் பல முனைகளில் நெருக்கடிகளை எதிர் கொள்கிறது.முதலாவது நெருக்கடி பொருளாதார ரீதியிலானது. இரண்டாவது நெருக்கடி டெல்டா திரிபு வைரஸ் தொற்று. மூன்றாவது நெருக்கடி ஐநாவின் அடுத்த கூட்டத்தொடரில் உருவாக்கப்பட இருக்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பொறி முறை பற்றிய எச்சரிக்கைகள். இம்மூன்று நெருக்கடிகளையும் ஒரே நேரத்தில் எதிர் கொள்ளும் அரசாங்கம் இதில் ஒரு முனையிலாவது சுதாகரிப்பதற்கு முயற்சிக்குமா?

அவ்வாறு அரசாங்கம் முயற்சிக்கக் கூடும் என்ற ஊ கத்தை பலப்படுத்தும் விதத்தில் கடந்த மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பின்வருமாறு குறிப்பை இட்டிருந்தார்.….”நீடித்த நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் அடையும் பொருட்டு பொறுப்புக்கூறலையும் மனித அபிவிருத்தியையும் உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் ஐநாவோடு இணைந்து பங்களிப்பை செய்கிறோம். தேவையான கட்டமைப்பு சார் சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் நீதியையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கான ஜனநாயக மற்றும் சட்டக் கட்டமைப்புக்குள் விவகாரங்களை தீர்த்துக் கொள்வதற்கு நாங்கள் அர்ப்பணிப்போடு இருக்கிறோம்”

அப்படியென்றால் அரசாங்கம் ஐநா வை நோக்கி ஏதோ ஒரு விதத்தில் சுதாகரிக்க முயற்சிப்பதாக கருதலாமா?பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்குள் கொண்டுவந்தது அப்படி ஒரு நகர்வுதான்.

அமெரிக்க பிரஜையான அவரை நிதியமைச்சராக நியமித்ததன் மூலம் அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கு ஏதோ ஒரு சமிக்ஞையை காட்ட விரும்புகிறது. அதுபோலவே நிலைமாறுகால நீதி செய்முறைகளின் கீழ் ரணில் விக்கிரமசிங்கவால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களான காணாமல் போனவர்களுக்கான அலுவலகம்,இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம்,சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான அலுவலகம் ஆகிய மூன்று அலுவலகங்களையும் அரசாங்கம் இன்றுவரையிலும் மூடவில்லை.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அவற்றுக்குரிய வளங்கள் குறைக்கப்பட்டன.சில கட்டமைப்புகளுக்கு முன்னாள் படைப்பிரதானிகள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நியமனங்கள் தொடர்பில் ஜஸ்மின் சூக்கா போன்றவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். ஒரு பெருந்தொற்றுச் சூழலுக்குள் அரசாங்கம் நாட்டின் எல்லாத் துறைகளையும் படைமயப்படுத்துவதைப் போல நிலைமாறுகால நீதிக்குரிய கட்டமைப்புகளையும் படைமையப்படுத்தி வருகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இவ்வாறு மேற்சொன்ன ஒரு அலுவலகத்துக்கு நியமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஒருவர் சில கிழமைகளுக்கு முன் இயற்கை மரணம் அடைந்து விட்டார்.இந்த அலுவலகங்களை தொடர்ந்தும் இயக்குவதன் மூலம் அரசாங்கம் ஐநாவுக்கு எதோ ஒரு சமிக்ஞையை காட்ட விரும்புகிறது. நிலைமாறுகால நீதி தொடர்பில் உள்நாட்டு வடிவிலான ஒரு பொறிமுறையை அதாவது ராஜபக்ச பாணியிலான ஒரு பொறிமுறையை முன்னெடுக்கத் தயார் என்ற சமிக்ஞையே அது.

இவ்வாறான சமிக்ஞைகள் மூலம் அடுத்த மாதம் ஐநாவால் உருவாக்கப்பட்டவிருக்கும் சாட்சிகளையும் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான அந்தக் கட்டமைப்பை தடுத்து நிறுத்த முடியுமா ?இல்லை என்றே தோன்றுகிறது.

கடந்த ஐநாதீர்மானத்தின் போது இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் திரட்டுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. இப்பொறிமுறைக்கு 2.8 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் மதிப்பிடப்பட்டது. இத்தொகையை பிரதானமாக அவுஸ்திரேலியாவும் பிரித்தானியாவும் சேர்ந்து வழங்கும் என்றும் அப்பொழுது தெரியவந்தது.

அப்படி ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று கேட்டு மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து கடந்த ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு ஒரு கூட்டு கடிதத்தை அனுப்பின. அதன்படி அப்பொறிமுறை ஐநா பொதுச் சபையின் கீழ் உருவாக்கப்பட வேண்டும் என்று அவை எதிர்பார்த்தன. ஆனால் கடந்த ஐ.நா தீர்மானத்தின்படி உருவாக்கப்பட இருக்கும் கட்டமைப்பானது ஐநா மனித உரிமைகள் சபையின் கீழேயே உருவாக்கப்படும். எனவே அது தமிழ் மக்கள் கேட்ட ஒரு கட்டமைப்பு அல்ல. அதில் குறைபாடுகள் இருக்கும். எனினும் அதில் இருக்கக்கூடிய எல்லா குறைபாடுகளோடும் அது இலங்கை அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலான ஒன்றாகவே காணப்படும்.

அடுத்த மாதம் உருவாக்கப்படவுள்ள அப்பொறிமுறையானது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் என்று அழைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அலுவலகமானது ஏறக்குறைய 13 நிபுணர்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.இதுபோன்ற செயலகங்கள் ஏற்கனவே லத்தீன் அமெரிக்க நாடுகளான பெரு,கொலம்பியா போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளன.இலங்கைத் தீவில் உருவாக்கப்பட இருக்கும் செயலகத்துக்கு வேண்டிய நிதி முழுமையாக ஒதுக்கப்படவில்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை வட்டாரங்கள் முன்பு தெரிவித்திருந்தன. கோரப்பட்ட நிதியின் பாதியளவு தொகைதான் வழங்கப்பட்டிருப்பதாக சில கிழமைகளுக்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

எனினும் கடந்த வாரம் கிடைத்த தகவல்களின்படி மேற்படி செயலகத்துக்கு வேண்டிய முழு நிதியும் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே அச்செயலகம் அடுத்த மாதத்திலிருந்து இயங்க தொடங்கப் போகிறது. அது இலங்கைத் தீவில் நிகழ்ந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிக்க போகிறது.இதனால் தென்னிலங்கையில் வெற்றி நாயகர்களாக கொண்டாடப்படும் படைத்தரப்பின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்க தேவையான சான்றுகளும் சாட்சிகளும் சேகரிக்கப்படுவதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படும்.இது தென்னிலங்கையில்

சிங்கள பௌத்த பெருந்தேசியவாத உணர்வுகளை அதிகம் தூண்டக்கூடியது. அதை அரசாங்கம் எப்படி அணுகும்?

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட வைரஸ் நெருக்கடி பொருளாதார நெருக்கடி ஆகிய இரண்டு நெருக்கடிகளையும் கடப்பதற்கு அல்லது அந்த நெருக்கடிகளில் மீதானே சாதாரண சிங்கள வெகுசனத்தின் கவனத்தை திசைதிருப்புவதற்கு அது அரசாங்கத்துக்கு உதவக்கூடும். கடந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சியை தொகுத்துப் பார்த்தால் அரசாங்கம் அவ்வாறு யோ சிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உண்டு.

இந்த அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால் அடுத்த மாதம் உருவாக இருக்கும் புதிய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு இரண்டு தெரிவுகள்தான் உண்டு.முதலாவது ஒரு நெருக்கடியை வைத்து ஏனைய நெருக்கடிகளை கடப்பது.அதாவது கிரைசிஸ் மனேஜ்மன்ட்- crisis management. இரண்டாவது தெரிவு, மூன்று நெருக்கடிகளில் உடனடிக்குத் தணிக்கப்படக்கூடிய ஒன்றைத் தணிப்பதற்கு முயற்சிப்பது.

டெல்டா திரிபு வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வருவது என்றால் நாட்டை முடக்க வேண்டும். நாட்டை முடக்கினால் பொருளாதாரம் மேலும் சரியும். எனவே அரசாங்கம் நாட்டை முடக்க தயங்குகிறது. தடுப்பூசிகளை விரைவாக ஏற்றுவதன் மூலம் டெல்டா திரிபு வைரஸின் தாக்கத்திலிருந்து ஓரளவுக்காவது தப்பலாம் என்று அரசாங்கம் சிந்திக்கிறது. மேற்கு நாடுகள் covid-19ஐ அவ்வாறுதான் கட்டுக்குள் கொண்டுவந்தன.. அதனால்தான் அரசாங்கம் தடுப்பூசி ஏற்றுவதை ஒரு பந்தயம் போல எதிர்கொள்கிறது. ஏறக்குறைய ஒரு யுத்த நடவடிக்கை போல அதை முன்னெடுக்கிறது. அதில் கணிசமான அளவுக்கு முன்னேறியுமிருக்கிறது.

எனினும் டெல்டா திரிபு வைரஸ் தொடர்ந்தும் ஓர் அச்சுறுத்தலாகவே காணப்படுகிறது.பொருளாதாரமும் சரிந்துகொண்டே போகிறது.இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கம் ஏதோவொரு சுதாகரிப்பைச் செய்ய எத்தனிக்குமா? கடந்த மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தனது ருவிட்டர் பக்கத்தில் ஐநா.வை நோக்கி அனுப்பிய செய்தி அதைத்தான் காட்டுகிறதா? அந்த ருவிற்றர் பதிவு வருமாறு….”நீடித்த நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் அடையும் பொருட்டு பொறுப்புக்கூறலையும் மனித அபிவிருத்தியையும் உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் ஐநாவோடு இணைந்து பங்களிப்பை செய்கிறோம். தேவையான கட்டமைப்புசார் சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் நீதியையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கான ஜனநாயக மற்றும் சட்டக் கட்டமைப்புக்குள் விவகாரங்களை தீர்த்துக் கொள்வதற்கு நாங்கள் அர்ப்பணிப்போடு இருக்கிறோம்”

அப்படியென்றால் ஐநாவை சுதாகரிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறதா? அதாவது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஆட்சிக் கொள்கைக்கு முரணாக மிகவும் பிந்தியாவது ஐ.ந.வை கையாள போகிறதா? அல்லது ஒரு பிரச்சினையால் ஏனைய பிரச்சினைகளை சமாளிக்கப் போகிறதா?

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More