“தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமை. உரிய காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. எனவே, தேர்தலைப் பிற்போடுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை. 25 ஆயிரம் பேர் வீதிக்கு இறங்கினார்கள் என்பதற்காக எமது ஆதரவு தளம் சரியாது. முகநூலில் யார் என்னதான் எழுதினாலும் மக்கள் மனங்களில் ‘மொட்டு’தான் உள்ளது. தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அது தெரியவரும்.
எனவேதான் நாமும் தேர்தலைக் கோருகின்றோம். தேர்தலைப் பிற்போடுவதற்கு இடமளிக்கமாட்டோம். முன்கூட்டியே தேர்தலை நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுதான் ராஜபக்சக்களுக்கு உள்ளது” – என்றார்.