செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மூன்று தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுதலை!

மூன்று தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுதலை!

1 minutes read

சிறைச்சாலையில் 14 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் இருந்த யாழ். வேலணையைச் சேர்ந்த இ.திருவருள், யாழ். கரவெட்டியைச் சேர்ந்த ம.சுலக்சன், முள்ளியவளையைச் சேர்ந்த க.தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், குறித்து மூவரையும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் விடுவித்து, அவர்களை விடுதலை செய்தார்.

இது தொடர்பாக குறித்த மூன்று அரசியல் கைதிகள் தொடர்பில் மன்றில் ஆஜராகி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து விளக்கமறியலிலும், தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டிருந்த இ.திருவருள் (வயது 45), ம.சுலக்சன் (வயது 34), க.தர்சன் (வயது 33) ஆகியோர் வவுனியா மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 14 வருடங்களாக இவர்கள் தடுப்புக் காவலிலும், விளக்கமறியலிலும் இருந்த நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியால் இன்று விடுவிக்கப்பட்டனர் .

அர சுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டிய குற்றம் இவர்களுக்கு எதிராகச் சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் ஏற்கனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்மானித்தது. அதனைத் தொடர்ந்து சுயாதீன சாட்சிகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. அந்தச் சாட்சியங்கள் இவர்களது குற்றத்தை நிரூப்பதற்கு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக அனைத்துக் குற்றங்களிலும் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மிக நீண்டகாலம் இருந்த அரசியல் கைதிகளின் வழக்காக இது காணப்படுகின்றது. உண்மையில் இவர்களது விடுதலை எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது” – என்றார்.

விடுதலை செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றம் முன்பாக வருகை தந்திருந்த தமது குடும்பத்தினரையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனையும் கட்டியணைந்துத் தமது மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் வெளிப்படுத்தியதுடன் தமது விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More