செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சீன மாணவர்களின் தியனன்மென் போராட்டம் அடக்கப்பட்ட கொடூரம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

சீன மாணவர்களின் தியனன்மென் போராட்டம் அடக்கப்பட்ட கொடூரம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

4 minutes read

(தனி ஒரு போராட்டக்காரர் டாங்கி வரிசையை மறித்து நிற்பதைக்காட்டும் காட்சி அது. 20ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கிய புகைப்படமாகவும் இது கருதப்படுகிறது. சீனத் தலைநகர் பெய்ஜிங் தியனன்மென் சதுக்கத்தில் 34 ஆண்டுகளுக்கு முன் பெரும் போராட்டத்தின் படுகொலை களத்தின் வரலாற்றை என்றும் நினைவுபடுத்தும் ஒரு முக்கிய புகைப்படமாகும்)

சீனாவில் 1989 மே இறுதி நாட்களில் ஜனநாயக உரிமை கேட்டுப் போராடிய மாணவர்கள் ஏராளமானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் தான் தியனன்மென் சதுக்கம் (Tiananmen Square) ஆகும்.

1989 தியனன்மென் சதுக்க போராட்டம் :

தியனன்மென் என்ற பெயரை உலகம் இன்னும் அதிர்ச்சியோடு நினைவுகூர்வதற்கு இந்தப் போராட்டமும், அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு சீன அரசு கையாண்ட வழிமுறைகளால் எண்ணற்றவர்கள் கொல்லப்பட்டதும்தான் காரணம்.

சீனாவின் தியனன்மென் சதுக்கப் படுகொலை வரலாற்றில் உலகை அதிரவைத்த படுகொலையாக இன்னமும் கருதப்படுகிறது. இந்த தியனன்மென் சதுக்கம் சீனாவில் சொர்க்கத்தின் அமைதியின் வாயில் என்றும் அழைப்பர்.

சீன தலைநகரம் பெய்ஜிங்கின் நடுப் பகுதியில் அமைந்துள்ள தியனன்மென் சதுக்கம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இச்சதுக்கம் உலகில் மிகப்பெரிய நகர்ப்புற சதுக்கமாகவும் சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான இடமாகவும் உள்ளது.

1989இல் சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கில், தியனன்மென் சதுக்கத்தில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சீன தொழிலாளர்களும், கல்லூரி மாணவர்களும், இப்போராட்டத்தை தலைமை தாங்கினர். 1989இல் ஏப்ரல் 15 முதல் ஜூன் 4 வரை இப்போராட்டங்கள் நடந்தன.

மாணவர் போராட்டம் எப்படி உருவாகியது?

1989 ஆண்டில் மேம்பட்ட அரசியல் உரிமைகள் கோரி போராட்ட மேகம் மாணவர் மத்தியில் எழுந்தது. அத்துடன் முக்கிய அரசியல் தலைவரும், பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஆதரித்தவருமான ஹு யோபாங்கின் இறப்பு போராட்டக்காரர்களை தூண்டியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் எதிரிகளால் கட்சியின் உயர் பதவியிலிருந்து அவர் ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தார். 1989 ஏப்ரல் மாதம் ஹுவின் இறுதிச் சடங்கின்போது ஆயிரக்கணக்கானோர் கூடினர். அவர்கள் சீனாவில் பேச்சுரிமை கோரினர். கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் வலியுறுத்தினர்.

அதற்கு அடுத்த வாரம் போராட்டக்காரர்கள் தியானென்மென் சதுக்கத்தில் கூடினர். இந்தப் போராட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் வரை கூடியதாக கணிக்கப்படுகிறது. முதலில் அரசாங்கம் போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த ஒரு நேரடி நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதில் சீன அரசுன் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. சிலர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். சிலர் பெரிதாக நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என்றனர்.

சீனப் பொதுவுடமைக் கட்சியின் (CPP) பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அரசியல் கொள்கைகளுக்கும் எதிராக மாணவர்கள் போராட்டம் செய்தனர். பெய்ஜிங்கில் தியனன்மென் சதுக்கத்தில் முக்கியமான போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் சாங்காய் போன்ற பல்வேறு சீன நகரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன.

பெய்ஜிங்கில் இந்த அறவழியில் வன்முறையற்ற போராட்டம் மீது சீன இராணுவம் தாக்குதல் செய்ததில் பலரும் உயிரிழந்தனர், மேலும் பலரும் காயமடைந்தனர். உயிரிழந்த மக்கள் கணக்கெடுப்பு சீன அரசு ஆவணங்களின் படி 200-300. ஆனால் மேற்கத்திய ஊடகங்களின் படி 300-800, சீன மாணவர்களின் சங்கங்களின் படி 2,000-3,000 ஆகும்.

இந்த வன்முறையுக்கு பிறகு சீன அரசு பல மக்களை கைது செய்ததுடன், வெளிநாடு செய்தி ஊடகங்களை தடையும் செய்துள்ளது. சீன அரசு செய்த வன்முறையையும் ஊடகம் மீது தடை செயலையும் பல்வேறு நாடுகள் அப்போது கண்டனம் செய்தன.

பின்னைய ஆதாரங்களின்படி, சீனாவிற்கான பிரித்தானிய தூதுவர் ஆலன் டொனால்டு 2017-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆவணங்களின்படி, இப்போராட்டத்தில் 10,000 பேர் பலியானதாக தெரிவித்துள்ளார்.

டெங் சியாவோ பிங் பொருளாதார சீர்திருத்தம் :

1989 ஆம் ஆண்டு தியனன்மென் சதுக்க எதிர்ப்புக்கு வழிவகுத்த பல காரணிகள் இருந்தன. ஆனால் இந்த பல காரணங்களில் முக்கியமாக, சீனாவின் பெரிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கான டெங் சியாவோ பிங் 1979 திறப்பும் ஒன்றாகும்.

அத்துடன் மாவோயிச கம்யூனிச கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்த ஒரு நாடு மற்றும் கலாச்சாரப் புரட்சியின் கொந்தளிப்பில் திடீரென்று அதிக சுதந்திரத்தை அனுபவித்தது. சீன பத்திரிகை அவர்கள் முன்பு ஒருபோதும் மறைக்க முடியாத பிரச்சினைகள் குறித்து வெளியிடத் தொடங்கியது. மாணவர்கள் கல்லூரி வளாகங்களில் அரசியலை விவாதித்தனர்.
அதேவேளை மேற்கத்திய செய்தி ஊடகங்கள் பெரும்பாலும் கம்யூனிச ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்திற்கான கூக்குரலாக, சாதாரணமாக எதிர்ப்பைக் காட்டியது.

இந்த சோக நிகழ்வான தியனன்மென் சதுக்க எதிர்ப்புக்கள் உருவாக நான்கு மூல காரணங்களும் உள்ளன. சீனாவில் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் வளர்ந்து வரும் பொருளாதார செழிப்புக்கு வழிவகுத்தன. பல வணிகத் தலைவர்கள் அன்றைய தலைவர் டெங் சியாவோ பிங்கின் வழிநடத்தலை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டனர்.

அடுத்த முக்கிய காரணியாக அதிக பணவீக்கம் கருதப்பட்டது. இதனால் விவசாய பிரச்சினைகளை மோசமாக்கியதுடன், நாட்டின் பணவீக்கம், 28% ஆக உயர்ந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி(CCP )ஊழல்:

மற்றய முக்கிய காரணியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி(CCP ) ஊழல் ஆகும். 1980 களின் பிற்பகுதியில், கட்சித் தலைமையின் ஊழலால் மக்கள் விரக்தி அடைந்தனர். உதாரணமாக, பல கட்சி தலைவர்களும் அவர்களது குழந்தைகளும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சாதாரண மக்களுக்கு அனைத்தும் தடைசெய்யப்பட்டிருந்தன.

1980களில் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சில தனியார் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அனுமதி வழங்க தொடங்கியது. அப்போது சீனாவில் பெரிய மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

சீனத் தலைவர் டெங் ஷியோபிங், பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்தலாம் என பலரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். இருப்பினும் இந்த நடவடிக்கை பல ஊழல்களுக்கு வித்திட்டது. அதே நேரம் அரசியலில் வெளிப்படைத் தன்மை தேவை என்ற கோரிக்கையையும் எழுந்தது.

அதேவேளை இந்த புதிய சீர்திருத்தங்கள் வேகமாக மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஒரு தரப்பும், நாட்டை கடுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று கூறும் கடும்போக்குவாதிகள் மறு தரப்பும் என சீன கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இருவிதமான வேறுபாடுகள் முகம் காட்டின.

இதன் விளைவாக 1980களில் இருந்து மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் ஒன்று தொடங்கியது. அந்த போராட்டத்தில் வெளிநாட்டில் வாழ்ந்தவர்களும், புதிய யோசனைகள் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்துக்குப் பழகியவர்களும் கலந்து கொண்டனர்.

டாங்கிகளை எதிர்த்த நபரின் புகழ்பெற்ற புகைப்படம் :

இறுதியில் கடும்போக்காளர்கள் வென்றனர். பெய்ஜிங்கில் மே மாத இறுதியில் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தது. ஜூன் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தியனன்மென் சதுக்கத்தை நோக்கி அரச படைகள் சென்றன. அந்தப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர படையினர் துப்பாக்கிச் சூடு நடாத்தி போராட்டக்காரர்களை கைது செய்தனர்.

ஜூன் மாதம் 5ஆம் தேதி, சதுக்கத்தில் இருந்து வெளியேறிய ராணுவ டாங்கி வரிசை முன், இரண்டு கைப்பைகளை வைத்து கொண்டு சாமானியராகத் தோன்றிய ஒரு மனிதர் மறித்துக்கொண்டு நின்றார். அதன்பின் அவர் இரண்டு படையினரால் இழுத்து தள்ளப்பட்டார்.அந்த நபருக்கு பிறகு என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஆனால் அந்தக் காட்சியைப் பதிவு செய்த புகைப்படம், அந்தப் போராட்டத்தின் அடையாளமாக டாங்கிகளை எதிர்த்த மனிதரின் படம் மாறியது.

போராட்டத்தில் கொல்லப்பட்ட எண்ணிக்கை?

இந்தப் போரட்டத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. முதலில் 200 பொதுமக்களும், பாதுகாப்பு படையை சேர்ந்த சில டஜன் பேரும் உயிரிழந்ததாக சீன அரசு 1989ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் தெரிவித்தது.

ஆனால், நூற்றுக் கணக்கானோர் முதல், பல்லாயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று வெவ்வேறு கணிப்புகள் வெளியாயின. சீனாவுக்கான பிரிட்டனின் தூதர் ஆலன் டொனால்ட் அனுப்பிய தகவல் பறிமாற்றம் ஒன்றில், இந்த சம்பவத்தில் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

சீன மக்களுக்கு இங்கு என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியுமா என்பதும் ஐயமே. அத்துடன் தியனன்மென் சதுக்கத்தில் என்ன நடந்தது என்பது சீனாவில் அதிகம் பேசப்படக் கூடிய ஒரு விஷயமன்று. இப் படுகொலை தொடர்பான இணையப் பதிவுகள் அரசால் உடனுக்குடன் நீக்கப்பட்டுவிடும்.

தற்போதைய தலைமுறையினருக்கு தியனன்மென் சதுக்கம் குறித்து அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் எனில் போராட்டம் நடந்தபோது பிறந்திருக்காத இன்றைய தலைமுறையினருக்கு இப்படுகொலை பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் உண்மையே.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More