யாழ்ப்பாணத்தில் 8 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆறரைப் பவுண் நகைகளைத் திருடிய சந்தேகத்தில் 24 வயதான இளம் குடும்பப் பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த நகைகள் களவாடப்பட்டுள்ளன.
அதே வீதியில் அருகில் இருந்த நட்பு ரீதியான குடும்பத்தினராலேயே நகைகள் களவாடப்பட்டுள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
வேலை நிமிர்த்தமாக வெளியில் சென்றிருத்த வீட்டின் உரிமையாளர் மதியம் ஒரு மணியளவில் வீட்டுக்குத் திரும்பியிருந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாலை 4:30 மணியளவில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக விசாரணையில் இறங்கிய பொலிஸ் குழுவினர் ஒரு மணித்தியாலத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்து, நகைகளையும் மீட்டுள்ளனர்.
தனியார் நிதி நிறுவனத்தில் தாலிக்கொடியை அடகு வைத்து 3 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளனர். அதில் 2 இலட்சத்து 92 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளதுடன் மிகுதி நகைகளைப் பிறிதொரு வீட்டின் பூச்சாடியின் கீழ் வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.