கொழும்பின் புறநகர் பகுதியான மாலம்பே – கஹந்தோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் இன்று அதிகாலை வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
35 வயதுடைய தாய், 9 மற்றும் 7 வயதுகளுடைய இரு மகன்மார் மற்றும் 6 வயதுடைய மகள் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் நஞ்சருந்தி உயிர்மாய்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை கடந்த 28 ஆம் திகதி நஞ்சருந்தி உயிர்மாய்த்துள்ளார். இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்றன. நிதிப் பிரச்சினை காரணமாக அவர் உயிர்மாய்த்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
இந்தநிலையில், தந்தையின் உயிரிழப்பால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகத் தாயும், மூன்று பிள்ளைகளும் சேர்ந்து நஞ்சருந்தி தாங்களும் உயிரை மாய்த்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தந்தையின் இறுதிக்கிரியை நடைபெற்ற மாலபேயில் உள்ள உறவினரின் வீட்டில் இருந்தே இவர்கள் நால்வரும் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நால்வரினதும் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.