செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எதிர்க்கட்சியினர் இன்று எங்கும் செல்ல முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர் | பிரதமர்

எதிர்க்கட்சியினர் இன்று எங்கும் செல்ல முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர் | பிரதமர்

3 minutes read

எதிர்க்கட்சியினர் தமக்கு ஒரு இடம் இல்லாது போய்விடுமோ என்று அஞ்சுவதாகவும், தேசிய மக்கள் சக்தியை வெற்றிகொள்ள வேண்டுமானால், மோசடி மற்றும் ஊழலை நிறுத்திக்காட்டுங்கள் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, உடுதும்பர, ஹசலக, குண்டசாலை, மடவளை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்ததாவது,

வேறு ஒரு யுகத்திற்கு இந்த நாட்டை கொண்டு செல்வதற்குத் தேவையான திட்டத்தை அரசாங்கம் தயாரித்து, முகாமைத்துவம் செய்து, செயற்படுத்தி வருகிறது.

நாடு எப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நாட்டின் பொருளாதாரம் இன்று ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியுள்ளது. ஊழல் மற்றும் வீண்விரயம் ஒழிக்கப்பட்டுள்ளது.

எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாதவகையில் மிகவும் கவனமாக செயற்பட்டு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க நாங்கள் பாடுபட்டுவருகிறோம்.

“இப்போது உங்களுக்கு ஜனாதிபதி பதவியும் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கத்தை நிறுவும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது, உங்களுக்கு இன்னும் என்ன தேவை?” என்று நீங்கள் நினைக்கலாம்.

உங்களுக்குத் தெரியும், ஒரு நாட்டை ஆட்சி செய்யும்போது, பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து மட்டங்களிலும் மக்களின் பிரதிநிதித்துவம் அவசியம்.

அந்த முக்கியத்துவத்தின் காரணமாகவே, முன்னைய அரசாங்கம் 2023 இல் நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தவில்லை. ஏனென்றால், கிராமம் வளர்ச்சியடைந்தால், கிராமத் தலைமை மாற்றமடைந்தால், கிராமத்திலிருந்தே அரசியல் கலாசாரம் மாறத் தொடங்கினால், அந்த ஊழல் அரசியல்வாதிகளுக்க செல்வதற்கு எங்கும் இடம் கிடையாது என்பதை அவர்கள் அறிவார்கள்.

அந்தப் பயத்தில்தான் அன்றைய அரசாங்கம் எங்கள் மீது குற்றம் சாட்டியது. கிராமத்திலிருந்து ஆரம்பிக்கவிருந்த எங்கள் பயணத்தை அவர்கள் தடுக்க முயன்றனர்.

இவ்வளவு காலமாக, வரவுசெலவுத்திட்டம் என்பது வெறும் காகிதத் துண்டாகவே இருந்தது.  அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியின் விருப்பப்படி விடயங்கள் நடந்தன. பணம் செலவழிக்கப்பட்டது.

கொள்கை பிரகடனத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட திட்டத்தைப் பார்த்து, அந்தத் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு செயற்படுத்த வேண்டிய விடயங்களை அடையாளம் கண்டு, அதன்படி, அடுத்த எட்டு மாதங்களுக்கான வரவுசெலவுத்திட்டத்தை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.

2024க்கு முன்பிருந்தே நாம் சொன்னோம். நாட்டை எம்மிடம் ஒப்படையுங்கள் என்று. அப்போதிருந்து, எங்கள் முன்னுரிமைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும். எமது முன்னுரிமைகள் என்ன? நாம் சுகாதார முறைமையை மேம்படுத்த வேண்டும்.

மக்கள் தங்கள் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார சேவைகளை எளிதாக பெறக்கூடியதாக இருக்க வேண்டும். நாம் படிப்படியாக முன்னோக்கிச் செல்லும் ஒரு சுகாதார முறைமையை உருவாக்க வேண்டும். நாம் கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறோம். ஒவ்வொரு கிராமப் பிரிவிலிருந்தும் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு முழுமையான வசதிகளுடன் கூடிய ஆரம்பப் பாடசாலையை அமைக்க வேண்டும்.

பிள்ளைகளுக்கு சுமையாக இல்லாத கல்வி முறையை அறிமுகப்படுத்த நாங்கள் ஏற்கனவே செயற்பட்டு வருகிறோம்.  போக்குவரத்து மற்றும் கிராமிய வீதி முறைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும், மேலும் கிராமத்திற்கு பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

அபிவிருத்தி என்பது நகரத்தை மையமாகக் கொண்ட, கொழும்பை மையமாகக் கொண்ட, ஒரு குழுவையோ அல்லது நெருங்கிய நண்பர்களையோ மையமாகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தி அல்ல.  அனைத்து மக்களும் பங்கேற்று பயனடையக்கூடிய, தங்கள் வாழ்க்கை எளிதாகி வருவதாக உணரக்கூடிய ஒரு முறையாக இது இருக்க வேண்டும்.

அனைவரும் அனுபவிக்கக்கூடிய பொதுவான வளங்களை நாம் மேம்படுத்த வேண்டும். அதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. இப்போது ஒதுக்கப்பட்ட அந்த நிதியை கிராமிய அபிவிருத்திக்குப் பயன்படுத்த தேவையான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

கடந்த காலத்தில், தியவண்ணாவையிலிருந்து ஒதுக்கப்பட்டு, திறைசேரியூடாக கிராமத்திற்கு அனுப்பப்பட்ட பணத்தில் மிகக் குறைவான தொகையே கிராமங்களைச் சென்றடைந்ததது. ஏனைய அனைத்தும் தனிப்பட்டவர்களின் சட்டைப் பைகளையே சென்றடைந்தன. அந்த முறைமை மாற வேண்டும்.

நாம் தனிநபர்களாகவன்றி, ஒரு தலைமையின் கீழ் ஒரு குழுவாக முன்னேறிச் செல்லும் ஒரு குழு. அதைத்தான் நாங்கள் அரச நிறுவனங்களுக்கும் சொல்கிறோம். அந்த நிறுவனங்களில் திறமையான அதிகாரிகள் உள்ளனர்.  ஆனால் அரசியல் தலையீடு காரணமாக, முன்னேற முடியவில்லை. இன்று, அவர்கள் ஒரு குழுவாக நாட்டிற்காக உழைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மக்களுக்காக சேவை செய்ய முன்வாருங்கள்.

மக்கள் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்ததைப் போலவே, அரசாங்க சேவையும் மோசடி மற்றும் ஊழலிலிருந்து விடுபட்டு மக்களுக்கு சேவை செய்யும் இடமாக மாற வேண்டும். அரசாங்க சேவையில் அந்த மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்கான ஊக்குவிப்பாகவே  நாங்கள் சம்பளத்தை உயர்த்தினோம். மக்களுக்காக உழைக்கும் அரச ஊழியர்களை நாங்கள் பாதுகாப்போம்.

மேலும், தனியார் சேவை மற்றும் தொழில்முயற்சியாளர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம். வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழிற் துறைகளை அமைக்கவும் வசதிகளை வழங்கவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவும், தேவையான வரிக் கொள்கைகளை மாற்றவும் அரசாங்கம் தயாராக உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் மீது வர்த்தக சமூகத்தை கோபமூட்ட எதிர்க்கட்சி பல்வேறு கதைகளைச் சொன்னது. முதலீட்டாளர்கள் வரப்போவதில்லை என்றார்கள். ஆனால் இன்று, வர்த்தக சமூகம் எங்களுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் செயற்பட்டுவருகிறது.

உங்கள் கிராமத்தை கட்டியெழுப்பவே இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியமானது. இன்று, எதிர்க்கட்சிகள் தங்களுக்கு எங்கும் செல்ல முடியாது போகுமோ என்று பயப்படுகிறார்கள், மேலும் தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சி மூன்று சதவீதத்திலிருந்து இவ்வளவு தூரம் வந்திருந்தால், இரண்டு சதவீதமாக இருக்கும் மொட்டுக் கட்சியாலும் வளர்ச்சியடைய முடியும் என்று மொட்டுக் கட்சியினர் கூறுகின்றனர். அப்படியானால், ஊழலையும் மோசடியையும் நிறுத்திக் காட்டுங்கள். எம்மை விட மக்களுக்கான அதிக அர்ப்பணிப்பை வெளிப்படுத்திக் காட்டுங்கள்.

அனைத்து விடயங்களையும் அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியாது, பாதுகாப்புத் தரப்பினாலும் முடியாது. கண்டிக்கு தினமும் சுமார் 3 இலட்சம் பேர் வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு பொலிதீன் பையை போட்டால் எமது சூழலுக்கு எமது நகரத்திற்கு எமது எதிர்காலத்திற்கு அதனால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும்? எனவே நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும், மாற்றத்தை எங்களில் இருந்தே ஆரம்பிப்போம்.

நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு பொருத்தமான அரசியல் கலாசாரத்திற்கு ஏற்ற குழுவுடன் மக்கள் இருப்பதாக தான் நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய பிக்கு முன்னணியின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சங்கைக்குரிய தலவல சுஜாத தேரர், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.எம். பஸ்நாயக்க உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More