யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்புகள் மீண்டும் சடுதியாக அதிகரித்து வருகின்றன என்று துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக அளவுக்கு அதிகமான போதைப்பொருள் பாவனையால் சிலர் உயிரிழந்துள்ளனர்.
அதீத போதைப்பொருளால் ஏற்படும் மரணங்கள் நீண்டகாலமாக இல்லாமலிருந்த நிலையில், அண்மைக்காலமாக மீண்டும் போதைப்பொருளால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளமை வேதனையான விடயமாகும்.
கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அத்துடன், ஒவ்வொரு நாளும் போதைப்பொருள் பாவனையால் குறைந்தது மூவராவது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீண்டும் போதைப்பொருள்களின் பாவனை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.” – என்றனர்.