நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்ட பொது ஆணையை அபகரிக்க முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சிகளுக்குக் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் தாங்கள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டுள்ளார்கள் என்பதையும் இந்த எச்சரிக்கைக்கு இடையில் அவர் நினைவூட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, 267 உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்க தேசிய மக்கள் சக்தி மக்கள் ஆணையைப் பெற்றுள்ளதாகவும், முதல் நாளில் 152 உள்ளூராட்சி மன்றங்களிலும், மீதமுள்ள 115 உள்ளூராட்சி மன்றங்களில் விரைவிலும் கட்டுப்பாட்டை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர், ஆட்சி செய்வதற்கான ஆணையை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றும், சில உள்ளூராட்சி சபைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களை மட்டுமே அக்கட்சிகள் பெற்றுள்ளன எனவும் அவர் கூறினார்.
பொது ஆணையை எதிர்த்து உருவாக்கப்பட்ட எந்தவொரு உள்ளூராட்சி சபையும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்றும் அவர் எச்சரித்தார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைத் தாங்கள் கொண்டுள்ளார்கள் எனக் குறிப்பிட்டு இந்த எச்சரிக்கையை அவர் விடுத்திருக்கின்றமையால், தாங்கள் கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் எதிர்க்கட்சிகள் கூட்டுச் சேர்ந்து தங்களின் நிர்வாகத்தைப் பறித்தால், தங்களிடமிருக்கும் மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை பலத்தை வைத்து, தேவையான புதிய சட்டங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் அத்தகைய உள்ளூராட்சி சபை நிர்வாகங்களை மீண்டும் பிடுங்குவோம் என்பதைத்தான் மக்களின் பொது ஆணையை எதிர்த்து உருவாக்கப்பட்ட எந்தவொரு உள்ளூராட்சி சபையும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று அவர் எச்சரிக்கைத் தொனியில் குறிப்பிட்டார் எனக் கருதப்படுகின்றது.