சுற்றுலா துறை நாட்டிற்கு மிக முக்கியம் என்பதால் சவால்களை எதிர்கொண்டு, இந்தத் துறையில் புதிய பயணத்திற்கு தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
சுற்றுலா துறையின் முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
கொவிட்- 19 தொற்றுநோயை எதிர்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விதிக்கப்பட்ட சுகாதார கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவர்கள் அந்தந்த நாடுகளுக்குச் செல்லும்போது அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அரசாங்கம் ஏற்கனவே தேவையான நிவாரணங்களை வழங்கியுள்ளதால், சரியான உத்திகளின் கீழ் எதிர்கால இலக்குகளை அடைய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தொழில் முனைவோர் இதன்போது தெரிவித்தனர்.
மேலும் இதன்போது, கொரோனா தடுப்பூசியை வழங்கும்போது ஹோட்டல் ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படாத நிலையில், வசதிகளை பெற்றுக்கொடுப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லையென இதன்போது யோசனை முன்வைக்கப்பட்டது.
கொவிட் காலத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் ஒரு வீதத்தினரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.