முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை சுத்தம் செய்து, எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொண்ட விவசாயியை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அத்தோடு, பொலிஸார் மற்றும் வனவளத் திணைக்களத்தினரை அனுப்பி வேலைகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் குமுளமுனை தண்ணிமுறிப்புக் குள வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பேரானந்தம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தினைச் சுத்தம்செய்து டோசர் இயந்திரம் மூலம் காணியை சமப்படுத்தும் வேலைகளில் குறித்த காணி உரிமையாளர் நேற்று ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, அவ்விடத்துக்குச் சென்ற பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவினர் குறித்த இடம் குருந்தூர் மலைக்குச் சொந்தமான தொல்லியல் புராதன பூமி எனத் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, 500 ஏக்கர் நிலங்கள் புராதன பூமி எனவும் இங்கு எந்த வேலைகளிலும் ஈடுபட முடியாது என்றும் தெரிவித்ததுடன், இங்கு எவருக்கும் நிலங்கள் இல்லை எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தினர் மற்றும் வன திணைக்களத்தினரை அழைத்து காணி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், காணியை மீண்டும் சுத்தம் செய்யமுடியாது எனத் தெரிவித்து தடை விதித்துச் சென்றுள்ளதோடு, காணி உரிமையாளரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருமாறு தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், இந்தச் சம்பவத்தை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளரின் ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், அதிலுள்ள விபரங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.