செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு துறைமுக நகரம் தனி நாடல்ல!

கொழும்பு துறைமுக நகரம் தனி நாடல்ல!

3 minutes read

கொழும்பு துறைமுக நகரம் வர்த்தக ரீதியாக இலங்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதுடன், இதுவொரு தனிநாடல்ல. இதன் மொத்த நிலப்பரப்பும் இலங்கையுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையர் எவர் வேண்டுமானாலும் எவ்வித தடைகளுமின்றி கொழும்பு துறைமுக நகருக்குள் செல்ல முடியுமென இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரம் உருவாக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்குமெனவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

2014ஆம் ஆண்டில் இலங்கைக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளாக 1,635 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. 2015ஆம் ஆண்டில் 1161 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அது குறைவடைந்தது. 2019ஆம் ஆண்டில் 1,190 மில்லியன் அமெரிக்க டொலர்களே நேரடி வெளிநாட்டு முதலீடுகளாக எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே, தொடர்ச்சியாக எமது நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைந்தே வந்துள்ளன.

நாட்டின் தேசிய உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டுமாயின் பன்நாட்டு நேரடி முதலீடுகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்கான ஒரு மூலோபாயமாகத்தான் கொழும்பு துறைமுக நகர் வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக நேரடி வெளிநாட்டு முதலீடுகள் நாட்டில் அதிகரிக்கும் என்பதுடன், அந்நிய செலவாணி கையிருப்பும் அதிகரிக்கும்.

2014ஆம் ஆண்டில்தான் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாண்டு ஜனவரி மாதம் இத்திட்டத்திற்கான புதிய சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு மார்ச் மாதம் ஒப்புதல் பெறப்பட்டதுடன் தற்போது சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பார்க்க முடியும். சட்டத்தை முறையாக படிக்காதவர்கள்தான் பல்வேறு விளக்கங்களையும் கருத்துகளையும் கூறுவருகின்றனர்.

கொழும்பு துறைமுக ஆணைக்குழுவை உருவாக்கும் சட்டத்தின் முதல் பகுதியிலேயே ‘விசேட பொருளாதார வலயமொன்றை உருவாக்குவதற்கான சட்டத்திட்டங்களை உருவாக்குதல்’ எனக் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக இவ் வலயத்தில் வர்த்தக நடவடிக்கைகளை கொண்டுசெல்வதற்கான விதிமுறைகளை உருவாக்குதல் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வழங்குதல் மற்றும் ஏனைய அனுமதிகளை வழங்குதலுக்கான ஆணைக்குழுவை உருவாக்கல் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுச் சட்டம், இலங்கையால் உருவாக்கப்படுவது என்பதுடன், ஆணைக்குழுவுக்கான அதிகாரம் இச்சட்டத்தின் ஊடாகவே கிடைக்கப்பெறுகிறது.

வேலைத்திட்டத்தில் இரண்டு பங்குகள் உள்ளன. அரசாங்கத்தால் அனுமதியளிக்கும் இடங்களும் நிறுவனத்தால் அனுமதியளிக்கும் இடங்களும் உள்ளன.

பொருளாதார வலயத்திலிருந்து வர்த்தகங்களைஆரம்பிப்பதற்கும் கொண்டுநடத்துவதற்கும் வர்த்தகங்களை மேம்பாடுகளை ஊக்குவிப்பது ஆணைக்குழுவின் கீழ் நடைபெறும்.

சர்வதேச வர்த்தகம், கப்பற்றொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரைகடந்த வங்கித் தொழில், நிதிசார் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், வியாபார வழிமுறைகள், வெளியாட்களை பணிக்கு அமர்த்தல், கூட்டிணைக்கப்பட்ட தலைமையகங்களின் தொழில்பாடுகள், பிராந்திய விநியோக தொழிற்பாடுகள், சுற்றுலாப் பயணத்துறை மற்றும் வேறு துணை சேவைகளை மேம்படுத்துவதற்கு ஆணைக்குழுவுக்கே அதிகாரமுள்ளது.

சர்வதேச பிணக்குத் தீர்வு நிலையமொன்றை தாபிப்பதற்கும் நகர வசதி தொழிற்பாடுகள் மற்றும் பொருளாதார வலயத்தினுல் வதிவிட சமூகமொன்றின் குடியேற்றங்களை மேம்படுத்துவதற்கும் ஏனைய கருமங்களை ஏற்பாடு செய்வதும் சட்டமூலத்தின் மூலம் உருவாக்கப்படுவதற்கு அனுமதியளிக்கப்படும்.

கொழும்பு துறைமுக நகருக்கான சட்டம் இந்த நாட்டின் வர்த்தகத்துறைக்கு திரும்புமுனையாக அமையும். இதுவொரு முத்தரப்பு உடன்படிக்கையாகும். ஏனையவர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான அங்கீகாரமாகவும் இத்திட்டம் அமையும். எந்தவொரு நாட்டிலும் முதலீடுகளை மேற்கொள்பவர்கள் முதலில் நாட்டின் சட்டத்திட்டங்களையே ஆய்வுக்கு உட்படுத்துவார்கள். அதன் பின்னர்தான் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து தீர்மானிப்பர். இவை அனைத்துக்கும் தீர்வாக இச்சட்டம் அமையும்.

மொத்தமாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இத்திட்டத்திற்காக 269 ஹெக்டேயர் கடலில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 178 ஹெக்டேயர்தான் வணிக ரீதியான நிலமாக உள்ளது. இதற்காக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முத்தரப்பு உடன்படிக்கை 2016ஆம் ஆண்டு ஓகஸ்டில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 990 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதுவரை முதலீடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வருட டிசம்பர் மாதத்துக்குள் ஏனைய நிதி முதலீடும் மேற்கொள்ளப்படும்.

269 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வணிக ரீதியாக பெறுமதியாகவுள்ள 178 ஹெக்டேயர் நிலபரப்பில் வேலைத்திட்டத்தை உருவாக்கும் நிறுவனத்துக்கு 116 ஹெக்டேயர் நிலப்பரப்பு வழங்கப்படும் என்பதுடன், 62 ஹெக்டேயர் நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமானதாகவும் 91 ஹெக்டேயர் பொது நிலப்பரபாக அரசாங்கத்தின் கீழ் இருக்கும். உருவாக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு, புதிய நிலப்பரப்பாக நாட்டின் வரைப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மூடிமறைக்கப்பட்டு இந்த விடயத்தை செய்துள்ளதாக கூறுகின்றனர். அவ்வாறில்லை. அனைத்து விடயங்களும் வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாகவே செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு, 99 வருட குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொடுக்கப்படும்.

புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நகர அபிவிருத்தி ஆணைக்குழுவுக்கு சுவீகரிக்கப்பட்டிருந்த இந்த நிலப்பரப்பு, ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். தெற்காசிய வலயத்தின் மத்திய நிலையமாக கொழும்பு துறைமுக நகரை மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும்.

இச்சட்டத்திற்கு எதிராக 20 மனுக்கள் இதுவரை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பான தீர்ப்புகள் வெளியான பின்னர்தான் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்படும். உயர்நீதிமன்றம் சட்டத்தில் வாக்கியங்களை மாற்றியமைக்குமாறு கூறினால் அதனையும் நாம் செய்வோம். நாட்டுக்கு நல்லதையே நாமும் செய்ய விரும்புகிறோம்.

ஆகவே, சட்டம் தொடர்பில் உரிய தெளிவில்லாதவர்களே இதுகுறித்து விமர்சனங்களை முன்வைக்கின்றனர். கொழும்பு துறைமுக நகருக்கு எவர் வேண்டுமெனாலும் செல்ல முடியும். அதற்கு எவ்வித தடையும் இல்லை என்பதுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சென்று வரலாம். இதற்கான உறுதியை அரசாங்கம் ஏற்கிறது என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More