டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து அந் நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சுமார் 480 அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் மற்றும் 500 ஆதரவு ஊழியர்கள் ஜூலை மாத ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஜப்பான் தற்போது நான்காவது அலை கொவிட்-19 நோய்த்தொற்றின் பிடியில் உள்ளது, இதில் 36,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் தற்சமயம் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை இரத்து செய்வது குறித்தும் ஜப்பான் ஆளும் கட்சியின் மூத்த அதிகாரிகள் வியாழக்கிழமை பரிந்துரைத்துள்ளனர்.
இந் நிலையில் போட்டிகளில் கலந்து கொள்ளும் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அவுஸ்திரேலிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக் கூறினார்.
“அனைத்து ஒலிம்பிக் அணி விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான முன்மொழிவு தொடர்பாக அரசாங்கம் அவுஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டியுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது” என்று அவர் ஏ.பி.சி. செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார்.